கோவில் சிலைகளை திருடி விற்ற முன்னாள் செயல் அலுவலர் கைது!

பிப்ரவரி 06, 2019 419

திருச்சி (06 பிப் 2019): திருச்சி அருகே கோவிலில் சாமி சிலைகளை திருடி விற்ற 7 மாதங்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் செயல் அலுவலர் கைது செய்ய்யப்பட்டுள்ளார்.

திருச்சி அருகே கோவில் சிலைகளை திருடி விற்ற முன்னாள் செயல் அலுவலரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். இவர் கடந்த 7 மாதங்களாக தலைமறைவாக இருந்தவர் ஆவார்.திருச்சி ஜீயபுரம் திருப்பராய்த்துறையில் தாருகாவனேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவில் 1,300 ஆண்டுகள் பழமையானது. இந்த கோவிலில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த வைகாசி விசாக திருவிழாவின்போது, கோவிலில் இருந்த போகசக்தி அம்மன், சண்டிகேசுவரர் ஆகிய சிலைகள் திருட்டு போனது.

இதுகுறித்து ஜீயபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன்பேரில், போலீசார் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் கோவிலுக்கு சென்று ஆய்வு நடத்தினார்கள். அப்போது பல ஆண்டுகளுக்கு முன்பே அங்கிருந்த அங்காளம்மன் சிலையும் திருட்டு போனது தெரியவந்தது. இந்த 3 சிலைகள் திருட்டு குறித்து ஜீயபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

பின்னர் இந்த வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் ஜீயபுரத்தில் உள்ள தாருகாவனேசுவரர் கோவிலுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில் கோவிலில் அப்போதைய செயல் அலுவலராக இருந்த ஆனந்தகுமார்ராவ், கணக்கர் கண்ணன், திருமாலை கட்டும் வேலைசெய்துவந்த ராமநாதன் ஆகியோர் சேர்ந்து சிலைகளை திருடி விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் ஏற்கனவே ராமநாதன் கைது செய்யப்பட்டிருந்தார். கடந்த ஜனவரி மாதம் 30-ந்தேதி முன்னாள் ஊழியரான கணக்கர் கண்ணனும் கைது செய்யப்பட்டு கும்பகோணம் சிலை கடத்தல் பிரிவு கூடுதல் முதன்மை குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். முன்னாள் கோவில் செயல் அலுவலரான ஆனந்தகுமார்ராவ் கடந்த 7 மாதங்களாக தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில் ஆனந்தகுமார் ராவ் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவும் ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. அவரை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.

இந்த வழக்கில் கைதான கணக்கர் கண்ணன் அளித்த வாக்குமூலத்தில், “செயல் அலுவலர் ஆனந்தகுமார்ராவ் மற்றும் ராமநாதன் ஆகியோர்தான் சிலையை திருடி விற்றார்கள். தொன்மையான அங்காளம்மன் போன்று மாற்று சிலையை தன்னை செய்ய சொல்லி மிரட்டினார்கள். அவர்கள் சொன்னதுபோலவே செய்து தன் மனைவி வேண்டுதலுக்காக செய்து கொடுத்தது போன்று ஆவணம் தயாரிக்க சொன்னதால் அதன்படி செய்தேன்” என்றும் சொல்லி இருந்தார்.

இந்த நிலையில் திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கோவில் சிலை திருட்டு தொடர்பாக கடந்த 7 மாதமாக தலைமறைவாக இருந்த ஆனந்தகுமார்ராவை (வயது 45) கைது செய்தனர். பின்னர் அவரை, போலீசார் திருச்சியில் இருந்து அழைத்து சென்று கும்பகோணம் கூடுதல் முதன்மை குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...