அதிமுக - பாஜக கூட்டணி குறித்து வாய் திறந்த தம்பிதுரை!

பிப்ரவரி 08, 2019 427

சென்னை (08 பிப் 2019): நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி இன்னும் முடிவாகவில்லை என்று துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.

நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- பாராளுமன்ற தேர்தல் எந்த நேரத்தில் வந்தாலும் 40 இடங்களிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். பாரதிய ஜனதாவுடன் கூட்டணி பற்றி எனக்கு தெரியாது. அ.தி.மு.க.வில் கூட்டணி தொகுதி பங்கீடு செய்யவும், தேர்தல் அறிக்கையும் பிரசாரம் செய்யவும் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

அந்தந்த குழுக்கள் பணிகளை செய்துக் கொண்டு இருக்கின்றன. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்க உள்ளது. கட்சியில் தேர்தல் பொறுப்பு ஏற்றுள்ளவர்கள் அனைவரும் எது நல்லது என்று தேர்ந்து எடுத்து அதற்கு ஏற்ப செயல்படுவார்கள்.

யார்? யாருடன்? கூட்டணி என்பதை அ.தி.மு.க. தலைமை கழகம் இன்னும் முடிவு எடுக்க வில்லை. ஜெயலலிதா எப்படி செயல்பட்டாரோ அந்த வழியிலேயே நாங்கள் செயல்படுகிறோம். இன்றைய சூழ்நிலை பற்றி கட்சியை வழி நடத்துபவர்களுக்கு நன்றாக தெரியும். எப்படி செயல்பட்டால் நல்லது என்பதை தெரிந்து செயல் படுவார்கள்.

கூட்டணி தேவையா? இல்லையா? என்று அவர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும். அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது. மத்தியமாநில அரசுகள் நட்புடன் தான் இருக்கிறது. அ.தி.மு.க. இதுவரை தனித்து செயல்படுகிறது. மத்திய அரசிடம் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழகத்திற்கு வர வேண்டிய ரூ. 15 ஆயிரம் கோடியை கேட்டபோது வழங்கவில்லை. எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்தித்து தமிழகத்திற்கு வரவேண்டிய தொகையை கேட்டபோது அதுவும் வரவில்லை. கஜா புயல் பாதிப்புக்கு கேட்ட தொகையும் வரவில்லை. காவிரியில் மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது என்றோம். தமிழகத்திற்கு மத்திய அரசு செய்த பாதகங்களை தான் வெளிப்படுத்தி வருகிறேன்.

ஸ்டாலின் நீட் தேர்வு பற்றி பேசுகிறார். 2012-ம் ஆண்டு தி.மு.க.காங்கிரஸ் கூட்டணி அரசு தான் கொண்டு வந்தது. தமிழகத்தை பாதிக்கின்ற எந்தவொரு நிலையை மத்திய அரசு எடுத்தாலும் அ.தி.மு.க. எதிர்க்கும். தமிழகத்திற்கு யார் நல்லது செய்கிறார்களோ அவர்களுடன் தான் கூட்டணி என்று முதல்- அமைச்சர் சொல்லி இருக்கிறார். அ.தி.மு.க.வில் யார் வேண்டுமானாலும் விருப்ப மனு தருவதில் என்ன தவறு இருக்கிறது. யாருக்கு சீட் தருகிறார்கள் என்பதை பின்னால் பார்ப்போம்.

தலைவர்களின் வாரிசுகள் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை. பதவிகள் என்று வரும்போது தான் குறைபாடா நிறைபாடா என்பதை சொல்லமுடியும். குடும்ப அரசியல் என்பது தொடர்ந்து கட்சியிலும் ஆட்சியையும் ஒரு குடும்பமே இருப்பது தான். தி.மு.க.வில் அப்படி தான் உள்ளது. அ.தி.மு.க.வில் யாரும் இல்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரை தொடர்ந்து ஒ.பி.எஸ்., இ.பி.எஸ். வந்து உள்ளனர்.

மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டில் சொன்னது எல்லாம் முன்பே சொல்லியிருக்க வேண்டும். அப்போது கோட்டை விட்டுவிட்டு இப்போது சொல்கிறார்க்ள். அ.தி.மு.க.வின் கருத்துக்களை பாராளுமன்றத்தில் சொல்லுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...