பிரசவத்தின் போது நர்ஸின் கவனக்குறைவால் குழந்தை மரணம்!

பிப்ரவரி 09, 2019 279

கோவை (09 பிப் 2019): பிரசவத்தின் போது நர்ஸின் கவனக்குறைவால் குழந்தை கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை அடுத்த போத்தனூரை சேர்ந்த தம்பதி விக்ரம்-பவித்ரா. பவித்ராவுக்கு 25 வயதாகிறது. நிறைமாத கர்ப்பிணியான இவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்துக்காக கடந்த 2-ந் தேதி அனுமதிக்கப்பட்டார்.

நேற்று முன்தினம் அதிகாலை சுகப்பிரசவத்தில் ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் என்ன குழந்தை பிறந்தது என்று டாக்டர்கள் பெற்றோர் உட்பட யாரிடமும் காட்டவும் இல்லை, சொல்லவும் இல்லை.

குழந்தை எங்கே என்று உறவினர்கள் கேட்டதற்கு, "உடம்பு சரியில்லை, அதனால் இன்குபேட்டரில் வைத்துள்ளோம். ட்ரீட்மென்ட் போய் கொண்டிருக்கிறது. எல்லாம் சரியாயிடும்" என்று சொல்லி கொண்டே இருந்தனர்.

பிறகு திடீரென்று வந்து குழந்தை இறந்துவிட்டது என்று சொன்னதும், பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர். குழந்தை கீழே விழுந்து காயம் அடைந்து உயிரிழந்தஹை மறைக்க குழந்தையை முழுவதுமாக மூடி முகத்தை மட்டும் காட்டியுள்ளனர். குழந்தைக்கு இறுதி சடங்கு செய்யும்போதுதான் இவை தெரிய வந்தது.

இதை பார்த்து அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த பெற்றோரும், உறவினர்களும் குழந்தையை தூக்கி கொண்டு ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர். மேலும் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டமும் நடத்தப்பட்டது. தகவலறிந்து போலீசார் விரைந்து வந்துவிட்டனர். உடனே ஆஸ்பத்திரி தரப்பு, "அப்படி குழந்தை இறந்ததில் சந்தேகம் இருந்தால், பிரேத பரிசோதனை செய்து பார்க்கலாம்" என்றது. ஆனால் ஏற்கனவே குழந்தை உடம்பெல்லாம் காயங்களை பார்த்த பெற்றோர்களோ பிரேத பரிசோதனை செய்ய விரும்பவில்லை என தெரிகிறது.

குழந்தை உயிரிழக்க காரணமான ஆஸ்பத்திரி நிர்வாகம் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை குழந்தையின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...