பெருமாள் சிலையை கொண்டு செல்ல அதிகாரிகள் தடை!

பிப்ரவரி 10, 2019 406

கிருஷ்ணகிரி (10 பிப் 2019): கர்நாடகாவுக்கு பிரமாண்ட பெருமாள் சிலையை பாலம் வழியாக கொண்டு செல்ல அதிகாரிகள் தடை விதித்துள்ளதால் சிலையை கொண்டு செல்வதில் சிக்கல் நீடிக்கிறது.

கர்நாடகா மாநிலம் தெற்கு ஈஜிபுரா பகுதியில் 108 அடி உயரத்தில் விஸ்வரூப பெருமாள் சிலை அமைக்கப்படுகிறது. இதற்காக திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள கொரக்கோட்டை மலையில் இருந்து 350 டன் எடையில் பாறை வெட்டி எடுக்கப்பட்டது. இதில் முகம் மற்றும் இரண்டு கைகள் மட்டும் வடிவமைத்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7-ந் தேதி 240 டயர்கள் கொண்ட லாரியில் சிலை புறப்பட்டது. பல தடைகளை கடந்து இந்த லாரி கடந்த மாதம் 16-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான சிங்காரப்பேட்டைக்கு வந்தது.

நேற்று முன்தினம் மாலை கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் மேலுமலையை அடுத்த சாமல்பள்ளம் முனியப்பன் கோவில் பக்கமாக சிலை கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் நேற்று பிரமாண்ட பெருமாள் சிலையை பாலம் வழியாக கொண்டு செல்ல இருந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அங்கு சென்று பாலங்கள் வழியாக சிலையை கொண்டு செல்ல கூடாது என்றும், மேலும் சாமல்பள்ளம், சின்னாறு பகுதியில் தலா 2 இடங்களிலும், காமன்தொட்டி, கோபசந்திரம், பேரண்டப்பள்ளி, தர்கா ஆகிய இடங்களில் ஒரு இடத்திலும் பாலங்களில் கொண்டு செல்ல கூடாது என்றும் அதிகாரிகள் கூறினார்கள். இதனால் பெருமாள் சிலை தொடர்ந்து பெங்களூருவுக்கு கொண்டு செல்வதில் சிக்கல் நிலவுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...