திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம்: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

பிப்ரவரி 11, 2019 497

திருப்பூர் (11 பிப் 2019): திருச்சி விமானநிலையத்தில் ரூ.951 கோடியில் புதிய முனையம் திருப்பூரில் நடந்த விழாவில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய், இலங்கை, சார்ஜா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், சென்னை, பெங்களூரு, கோவா உள்ளிட்ட நகரங்களுக்கும் விமான சேவை உள்ளது. திருச்சி விமானநிலையத்திற்கு பயணிகள் வந்து செல்லும் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. திருச்சி விமானநிலையத்தில் தற்போது ஆண்டுக்கு 15 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் வந்து செல்கின்றனர். வருகிற 2025-ம் ஆண்டில் 36 லட்சம் பயணிகளை கையாளக்கூடிய நிலை ஏற்படும். எனவே எதிர்கால தேவை கருதியும், பயணிகளின் வசதிக்காகவும் திருச்சி விமானநிலையத்தில் புதிய முனையம் கட்ட முடிவு செய்யப்பட்டன. இதற்காக தற்போது உள்ள முனையத்தின் அருகே விமானநிலையத்தின் கிழக்கு பகுதியில் விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. பல்வேறு நவீன வசதிகளுடன் புதிய முனையம் ரூ.951 கோடியில் கட்டப்பட உள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகள் ஏற்கனவே தொடங்கியது.

இந்த நிலையில் திருப்பூரில் நேற்று மாலை நடந்த அரசு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு திருச்சி விமானநிலையத்தின் புதிய முனையத்திற்கு அடிக்கல் நாட்டினார். இதை காண்பதற்காக திருச்சி விமானநிலையத்தில் பழைய முனையம் அருகே காணொலி காட்சி மூலம் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. மேலும் இதற்காக சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து, விமான நிலைய இயக்குநர் கே. குணசேகரன், புதிய முனையக் கட்டுமானத் திட்டப் பொது மேலாளர் பி. ஸ்ரீகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: எதிர்காலத்தில் 2,900 சர்வதேசப் பயணிகள், 600 உள்நாட்டுப் பயணிகளை ஒரே நேரத்தில் கையாளும் வகையில் இந்த முனையம் அமைக்கப்படுகிறது.ரூ.950 கோடியில் புதிய முனையம் மற்றும் அவை தொடர்பான பணிகள் முதல் கட்டத்திலும், ஓடுதள விரிவாக்கப் பணிகள் இரண்டாவது கட்டத்திலும் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்திய விமான நிலைய ஆணையக் குழுமத்தில், தென் மண்டலங்களிலேயே அதிநவீன மற்றும் அழகான விமான நிலைய முனையக் கட்டடமாக இது அமையவிருப்பது இதன் சிறப்பாகும். 10 ஏரோ பிரிட்ஜ் (விமானங்களை நிலையத்துடன் இணைக்கும் பகுதி), ஏப்ரான் (விமானங்கள் நிறுத்தும் தளம்), 5 நிலைகளில் உடைமைகள் சோதிக்கும் அமைப்பு, 26 இடங்களில் நகரும் படிக்கட்டுகள் மற்றும் லிப்ட் வசதிகள், ஒரே நேரத்தில் 1,000 வாகனங்களை நிறுத்தும் அளவுக்கான கார் நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளுடன் புதிய முனையக் கட்டடம் அமைக்கப்படவுள்ளது.

340 கி.வோ. சக்தியை உற்பத்தி செய்யும் வகையில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் பேனல்கள் நிலைய மேற்கூரையில் அமைக்கப்பட உள்ளன. பயன்படுத்தப்படும் தண்ணீரில் 50% அளவுக்கு மறுசுழற்சி முறையில் அவற்றை சுத்திகரிப்பு செய்யவும், மழைநீரைச் சேமித்து பயன்படுத்தவும் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.விமானங்களை இயக்குவதற்கு ரூ.75 கோடியில் 42 மீட்டர் உயரம் கொண்ட கட்டுப்பாட்டு கோபுரத்துடன் கூடிய தொழில்நுட்ப வளாகம், விமான நிலைய ஊழியர்கள், மத்தியத் தொழில்பாதுகாப்புப் படையினருக்கு ரூ.65 கோடியில் குடியிருப்புகள் அமைக்கப்பட உள்ளன.

இதைத் தவிர, ஒரே நேரத்தில் இரு விமானங்களிலிருந்து முனையக் கட்டடத்துக்கு செல்லும் வகையில், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரூ.10 கோடி மதிப்பிலான 2 ஏரோபிரிட்ஜ்களும் அமைக்கப்பட உள்ளன. புதிய முனையக் கட்டடப் பணிகள் 2021 ஆம் ஆண்டில் முடிக்கப்படும். பயணிகள் சேவையில் இரண்டாவதாகவும், தென் மண்டலங்களில் முதலாவதாகவும் திருச்சி விமான நிலையம் இருந்து வருவது பெருமைக்குரியது. ஓடுதள விரிவாக்கம் உள்ளிட்ட சில மேம்பாட்டுப் பணிகள் விரைவில் செயல்படுத்தப்படும் .

திருச்சி மக்களவை உறுப்பினரும்,விமான நிலைய ஆலோசனைக்குழுத் தலைவருமான ப.குமார் கூறியது:

திருச்சியில் விமான நிலைய ஓடுதள விரிவாக்கப்பணிகள், ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்காக பாதுகாப்பு மற்றும் ரயில்வே துறைகளிடம் நிலம் கோரப்பட்டுள்ளது. விரைவில் நிலம் கையகப்படுத்தி,கிடப்பில் உள்ள பாலப்பணிகள் மற்றும் தொடங்கப்படாமல் உள்ள தொடர்புடைய பணிகள் நிறைவேற்றப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

இதில் திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி, திருச்சி விமானநிலைய ஆலோசனை குழு தலைவர் குமார் எம்.பி., திருச்சி விமானநிலைய இயக்குனர் குணசேகரன், ஆலோசனை குழு உறுப்பினர் டாக்டர் அலீம், சுங்கத்துறை ஆணையர் ரவுத்ரே, புதிய முனைய திட்ட அதிகாரி ஸ்ரீகிருஷ்ணா உள்பட அதிகாரிகளும், அ.தி.மு.க., பா.ஜ.க. நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மோடி அடிக்கல் நாட்டிய காட்சி ஒளிபரப்பப்பட்ட போது பா.ஜ.க.வினர் வாழ்த்து கோஷமிட்டனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நவக்கிரக ஹோமமும், கணபதி ஹோமமும் நடந்தது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...