சிறையில் உயிருக்கு போராடும் நளினி - முருகன் !

பிப்ரவரி 14, 2019 354

சென்னை (14 பிப் 2019): சிறையில் உண்ணாவிரதம் இருந்து வரும் நளினி மற்றும் முருகன் ஆகியோர் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

ராஜீவ் கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்துவரும் 7 பேர் விடுதலை குறித்த விவகாரத்தில் ஆளுநர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

எனவே கடந்த 5 மாதங்களாக காலந்தாழ்த்தி வருவதாலும், தங்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நளினி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.

இன்று நளினி 6-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதே கோரிக்கையை வலியுறுத்தி முருகன் இன்று 8-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இரண்டு பேருமே சிறை தரப்பில் சாப்பாடு கொடுத்தாலும் சாப்பிட மறுத்து வந்தனர்.

உண்ணாவிரதத்தை கைவிடுமாறும் முருகன், நளினியுடன் சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் இருவரும் அதற்கு செவிசாய்க்கவில்லை.

இந்நிலையில் நளினி முருகன் இருவரின் உடல் நிலை மோசம் அடைந்ததால் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதற்கிடையே நளினி முதல்வர் எடப்பாடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், "நான் சிறையிலேயே இறந்துவிட்டால், என் உடலை அரசு ஆஸ்பத்திரிக்கு தானம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...