மாணவி மாயமானதில் திடுக்கிடும் தகவல்!

பிப்ரவரி 15, 2019 299

சென்னை (15 பிப் 2019): சென்னை திருவள்ளூர் மாணவி மாயமானது தொடர்பாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த புதுர் வெங்கடாபுரத்தை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ந்தேதி மாயமானார். சாலைவழியாக பள்ளிக்கு சென்றால் 3 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலையில், கரும்பு காட்டு வழியாக சென்றால் அரை கிலோமீட்டர் தூரமே என்பதால் வயல் வழியாக பள்ளிக்கு சென்று வந்த அந்த மாணவி மாயமானது குறித்து பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

காவல்துறையினர் வழக்கை கிடப்பில் போட்ட நிலையில் கடந்த 11ந்தேதி வெங்காடாபுரம் ஓடையில் பள்ளி சீறுடையுடன் மாணவியின் எலும்பு துண்டுகள் மீட்கப்பட்டன. அவரை கொலை செய்து புதைத்தது தெரியவந்தது.

இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னியின் உத்தரவின் பேரில் மாணவி கொலை வழக்கின் விசாரணை தீவிரமடைந்தது. இந்த கொலை தொடர்பாக அதே ஊரை சேர்ந்த சங்கரையா என்ற 20 வயது இளைஞரை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் நடத்திய விசாரணையில் மாணவி கொலை குறித்து பல திடுக்கிடும் தகவல் வெளிச்சத்திற்கு வந்தது.

எப்போதும் இரு சக்கர வாகனத்தில் ஊர் சுற்றிவந்த சங்கரையா, அந்த மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் ஆந்த மாணவியோ சங்கரையாவை கண்டு கொள்ளவே இல்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி பள்ளிக்கு புறப்பட்ட அந்த மாணவி மாந்தோப்பில் வசித்து வரும் பாஸ்கர் என்பவரது வீட்டிற்கு பால் ஊற்றி செல்வதற்காக தோப்புக்குள் சென்றுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த சங்கரையா அந்த மாணவியை மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

இதனை அங்கு வந்த தோப்பு உரிமையாளர் 50 வயதான நாதமுனி மற்றும் அவரது நண்பர் கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் பார்த்துள்ளனர். சங்கரையாவிடம் இருந்து அந்த மாணவியை மீட்பதற்கு பதிலாக அவர்களும் அந்த மாணவியிடம் அத்துமீறியுள்ளனர். அதோடில்லாமல் மயங்கிய நிலையில் இருந்த மாணவியை தோப்பில் உள்ள தங்கள் வீட்டிற்கு தூக்கிச்சென்று அடைத்து வைத்துள்ளனர்.

இதை வெளியில் சொல்ல வேண்டாம் என்று சங்கரையாவிற்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுத்து அனுப்பி உள்ளனர். பின்னர் 5 நாட்களாக அந்த மாணவியை அறைக்குள் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். ஒரு நாள் சங்கரய்யா தனது நண்பர்கள் ஜெகதீஷ் மற்றும் சுரேஷ் ஆகியோரை அழைத்து வந்து மாணவியை பலவந்தப்படுத்தியுள்ளான்.

ஒரு கட்டத்தில் இவர்களிடம் சிக்கி பலத்த காயம் அடைந்த அந்த மாணவி பரிதாபமாக பலியானார். இதையடுத்து அவரது சடலத்தை மாந்தோப்பில் புதைத்துள்ளனர். பின்னர் இரு தினங்கள் கழித்து மாணவியின் சடலத்தை எடுத்து வெங்கடபுரம் கால்வாயில் 3 அடிக்கு குழி தோண்டி புதைத்துள்ளனர்.

மழை பெய்து ஓடையில் தண்ணீர் வேகமாக ஓடியதால் மண்ணரிப்பு ஏற்ப்பட்டு மெல்ல மெல்ல அந்த மாணவியின் உருக்குலைந்த சடலம் எலும்புக்கூடாக மேலே வந்துள்ளது. இந்த கொலை குறித்து வெளியில் வாய்திறக்காமல் இருப்பதற்கு நாதமுனி அவ்வப்போது சங்கரையாவிற்கு பணம் கொடுத்து வந்துள்ளார்.

மேலும் மாணவியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட அன்று சடலத்தை பார்த்தவர்கள் பேட்டி அளித்த போது அவருக்கு பின்னால் நின்று என்ன மாதிரி விசாரணை நடக்கிறது என்பதை நோட்டமிட்டு சங்கரையா கூட்டாளிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளான்.

இதையடுத்து இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சங்கரய்யாவால் சுட்டிக்காட்டப்படும் மாந்தோப்பு உரிமையாளர் நாதமுனி, அவரது நண்பர் கிருஷ்ணமூர்த்தி, ஜெகதீஷ், சுரேஷ் உள்ளிட்டோரை பிடித்து காவல்துறையினர் தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதியாக காணப்படும் மாந்தோப்பில் 5 நாட்கள் சிறைவைக்கப்பட்டு மனித மிருகங்களால் நரக வேதனைக்குள்ளாக்கப்பட்ட அந்த மாணவிக்கு நேர்ந்த கொடுமை கடும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...