விஜய்காந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு - பரபரத்த விமான நிலையம்!

பிப்ரவரி 17, 2019 660

சென்னை (17 பிப் 2019): அமெரிக்காவிற்கு சிகிச்சைக்காக சென்றிருந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று அதிகாலை சென்னை திரும்பினார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.அவருடன் மனைவி பிரேமலதா, மகன் விஜய் பிரபாகரன் ஆகியோரும் சென்றனர். கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை நாட்களில் விஜயகாந்த் அமெரிக்காவில் இருந்து வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்தார்.

இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் குறித்து பேச குழு ஒன்றையும் அறிவித்து இருந்தார். அதன்படி துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் தலைமையிலான குழுவினர் கூட்டணி பற்றி பேசி வருகிறார்கள். விஜயகாந்த் நாடு திரும்பிய பிறகு அதிகாரப்பூர்வமான பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஜயகாந்த் நேற்று அதிகாலை 1.15 மணிக்கு அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார். பிரான்சில் இருந்து விமானம் மூலம் வந்த அவர் உடனடியாக வீடு திரும்பவில்லை. சென்னை விமான நிலையத்தில் ஓய்வு அறையில் தங்கி இருந்தார். அவருடன் மனைவி பிரேமலதாவும் உடன் இருந்தார். மகன் விஜய பிரபாகர் மட்டும் வீட்டுக்கு சென்று விட்டார்.

காலை 8.30 மணிக்கு விஜயகாந்த் வெளியில் வருவார் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால் அவரை வரவேற்க மாவட்ட செயலாளர்கள் தலைமையில் தொண்டர்கள் விமான நிலையத்தில் அதிகாலையில் குவிந்திருந்தனர். ஆனால் அவர் வரவில்லை.

இதற்கிடையே விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் காலை 9.05 மணிக்கு விமான நிலையத்துக்கு வந்தார். அவரை தொடர்ந்து மகன் விஜயபிரபாகர் 9.20 மணிக்கு விமான நிலையத்திற்குள் சென்றார். காலை 11 மணி அளவில் மியாட் ஆஸ்பத்திரியில் இருந்து ஒரு டாக்டர், 3 நர்சுகள் அடங்கிய குழுவினர் விமான நிலையத்துக்குள் சென்றதாக தகவல் வெளியானது.

அவர்கள் விஜயகாந்தின் உடல்நிலையை பரிசோதனை செய்ததாகவும். விமான பயணத்தினால் விஜயகாந்த் சோர்வடைந்து உள்ளதாகவும், அதற்காக சிகிச்சை அளித்ததாகவும் தெரிகிறது. விஜயகாந்த் 10 மணி நேரத்துக்கு மேலாக விமான நிலையத்தில் தங்கி இருந்தார். சுமார் 12.30 மணி அளவில் அவர் பேட்டரி கார் மூலம் வெளியே வந்தார். அவரைப் பார்த்து தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...