போலீஸ் வாகனம் மோதியதில் மூன்று பேர் பலி!

பிப்ரவரி 18, 2019 338

விழுப்புரம் (18 பிப் 2019): விழுப்புரம் அருகே மத்திய ரிசர்வ் படை வாகனம் மோதியதில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் புதுச்சேரியில் இருந்து மாலையில் விழுப்புரம் புறப்பட்டனர். இவர்கள் வந்த வாகனத்தை விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வரும் போலீஸ் டிரைவரான சரவணன் என்பவர் ஓட்டி வந்தார். இந்த வாகனம், மாலை 5.30 மணியளவில் புதுச்சேரி மாநிலம் மதகடிப்பட்டை கடந்து விழுப்புரம் மாவட்ட எல்லையான கெங்கராம்பாளையம் மதுவிலக்கு சோதனைச்சாவடி அருகில் வந்து கொண்டிருந்தது.

அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த போலீஸ் வாகனம் தறிகெட்டு ஓடியது. அந்த சமயத்தில் எதிரே விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி மார்க்கமாக தனித்தனியாக 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 2 பேர் மீது கண் இமைக்கும் நேரத்தில் போலீஸ் வாகனம் மோதியது. மேலும் வலதுபுற சாலையோரம் சைக்கிளுடன் நின்றுகொண்டிருந்த மாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த மண்ணாங்கட்டி (வயது 60) என்பவர் மீதும் மோதிவிட்டு அங்குள்ள பள்ளத்தில் இறங்கி நின்றது. இந்த விபத்தில் மண்ணாங்கட்டி, மோட்டார் சைக்கிளில் வந்த கொண்டங்கியை சேர்ந்த முத்து மகன் பாபு(30), மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த உளுந்தூர்பேட்டை அருகே உள்ள தொப்பையான்குளத்தை சேர்ந்த காசிலிங்கம் மகன் திருமுருகன்(30) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...