கழகங்களுக்கு எதிராக புத்தகமே போட்டவர் ராமதாஸ் - ஸ்டாலின் விளாசல்!

பிப்ரவரி 19, 2019 381

சென்னை (19 பிப் 2019): கழகங்களுக்கு எதிராக புத்தகமே போட்டுவிட்டு தற்போது அதிமுகவில் கூட்டணி அமைத்துள்ளார் ராமதாஸ் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து ஏற்கெனவே ஏழு தொகுதிகளில் அவர்கள் போட்டியிட்ட போது என்ன நிலைக்கு ஆளானார்கள் என்பது தெரியும். 7 தொகுதிகளில் போட்டியிட்டு 9 தொகுதிகளில் தோல்வியடைந்தார்கள் என்று நான் அப்போதே சொன்னேன். சில பேருக்குப் புரியவில்லை. 7 தொகுதிகள் என்பது நாடாளுமன்றத் தொகுதிகள் கொடுத்தது.

இன்னொன்று எது என்றால் ராஜ்யசபா. ராஜ்யசபா என்பது இரண்டு எம்.பி.களுக்குச் சமம். இப்பொழுதும் 7+1 கொடுத்திருக்கிறார்கள். என்ன நடக்கப் போகிறது என்பதை நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு பாருங்கள்.

இதே ராமதாஸ், சமீபத்தில் அதிமுகவை விமர்சித்து மேடையில் பேசிவிட்டோ, அறிக்கை விட்டு விட்டோ போகவில்லை. புத்தகமே போட்டிருக்கிறார். அதன் தலைப்பு என்ன தெரியுமா? ‘கழகத்தின் கதை’. அந்தப் புத்தகத்தைப் போட்ட பெரிய மனுஷன் தான் இன்றைக்கு ஊழல்வாதிகளிடம் கூட உட்கார்ந்துகொண்டு கையெழுத்து போடுகிறார். வெட்கம் இல்லை? சூடு இல்லை? சொரணை இல்லை? நான் கேட்கிறேன்.

அப்படிப்பட்ட நிலையில் ஒரு பதவி தேவை தானா? 7 சீட் மட்டுமல்ல, 1 ராஜ்யசபா சீட் மட்டுமல்ல. அதற்குப் பின்னாலும் இருக்கிறது. அதெல்லாம் வெளியில் வரத்தான் போகிறது.

கழகத்தின் கதை என்கிற புத்தகத்தில், எடப்பாடி பழனிசாமியை மட்டுமல்ல, ஜெயலலிதாவைப் பற்றியும் அவர்கள் என்னென்ன ஊழல் செய்திருக்கிறார்கள், ஒவ்வொருவருடைய சொத்து என்ன, அமைச்சர்களின் வண்டவாளங்கள் என்ன என்பதையெல்லாம் எழுதியிருக்கிறார் ராமதாஸ்.

இன்றைக்கு கூட்டு சேர்ந்திருக்கிறார் என்று சொன்னால், மக்களைப் பற்றி நாட்டைப் பற்றி கவலைப்படாமல் பணத்தைப் பற்றி கவலைப்பட்டு இன்றைக்கு கூட்டணி சேர்ந்திருக்கிறார்கள். இந்த நிலையில் அதிமுக - பாஜக - பாமக ஒன்று சேர்ந்திருக்கிறது.

நம்முடைய திமுகவின் கூட்டணி நேரத்திற்காக அல்ல, சூழ்நிலைகளுக்காக அல்ல, நாட்டு மக்களின் பிரச்னைகளை, குறைகளைத் தீர்த்து வைப்பதற்காகத் தான் என்பதை உறுதியோடு இங்கே நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்''. என்று தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...