பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தலைமையில் மார்ச் 9-ல் மனித சங்கிலி போராட்டம்!

பிப்ரவரி 21, 2019 287

சென்னை (21 பிப் 2019): மார்ச் 9- ஆம் தேதி தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் அனைத்துக்கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளும் மனிதசங்கிலி போராட்டம் நடைபெறும் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.

பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்கு தமிழக ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருந்து வரும், பேரறிவாளனின் விடுதலை தொடர்பாக அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது : உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியும், அமைச்சரவை வலியுறுத்தியும் ஆளுநர் ஏன் கையெழுத்திடவில்லை என்ற ஆதங்கம் எழுந்துள்ளது. அனைவரின் எண்ணமும் சிறையில் உள்ள 7 பேர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே. 28 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த பின்னரும் விடுவிக்காமல் இருப்பது சரியா? என் மகன் பேரறிவாளன் நிரபராதி என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு தாயாக என் ஆசை எல்லாம் என் மகன் உடனடியாக வெளியில் வரவேண்டும் என்பதே. உடனடியாக ஆளுநர் கையெழுத்திட்டு 7 பேரை விடுவிக்க வேண்டும். பலகட்ட போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் நடத்தப்பட்டுவிட்டது.
உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 6 மாதம் ஆகிறது. இதுவரை ஆளுநர் கையெழுத்து இடவில்லை. இந்த சூழ்நிலையில் அடுத்தகட்டமாக சென்னை, மதுரை, கோவை,திருச்சி, திருநெல்வேலி, சேலம், புதுவை உள்ளிட்ட நகரங்களில் 7 பேரின் விடுதலையை வலியுறுத்தி மார்ச் 9-ஆம் தேதி மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தப்படும். மனித சங்கிலி போராட்டத்தில் அனைத்துக்கட்சி தலைவர்களும் பங்கேற்கவுள்ளார்கள்.

திரைத்துறையினர், மாணவர்கள், வழக்கறிஞர்கள், வணிகர் சங்கங்கள் என்று அனைவரும் பங்கேற்கும் நிகழ்வாக இந்த மனித சங்கிலி போராட்டம் இருக்கும். மேலும் பலதரப்பட்ட மக்கள் ஆதரவு தரும் பட்சத்தில், ஆளுநர் 7 பேரின் விடுதலை தொடர்பாக யோசித்து உனடனடியாக தீர்மானத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் இவ்வாறு அவர் கூறினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...