விழுப்புரம் அதிமுக எம்.பி விபத்தில் மரணம்!

பிப்ரவரி 23, 2019 455

விழுப்புரம் (23 பிப் 2019): விழுப்புரம் தொகுதி அதிமுக எம்.பி. ராஜேந்திரன், இன்று அதிகாலை ஏற்பட்ட கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 62.

விழுப்புரம் மாவட்டம் ஆதனப்பட்டு என்ற கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன், விழுப்புரம் தொகுதி அதிமுக எம்.பி.....நேற்று தைலாபுரம் தோட்டத்தில் அதிமுகவினருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அளித்த விருந்தில் அவர் கலந்து கொண்டார். இரவில் திண்டிவனத்தில் உள்ள சுற்றுலா மாளிகையில் தங்கிய அவர், இன்று அதிகாலை 5.30 மணி அளவில் டொயொட்டா இட்டியாஸ் VXD ரக காரில் சென்னை புறப்பட்டார்.

காரை, அருமைச் செல்வம் என்பவர் ஓட்டியுள்ளார். எம்.பி.யின் உறவினரான தமிழ் செல்வன் என்பவரும் உடன் பயணித்துள்ளார். திண்டிவனத்தை அடுத்த சிலோச்சனா பங்காரு திருமண மண்டபம் அருகே கார் சென்ற போது, சாலையின் நடுவே கட்டப்பட்டு வரும் தடுப்பின் மீது வேகமாக மோதியது. இதில் கார் முன் பகுதி முழுவதும் சிதைந்து போனது. எம்.பி.ராஜேந்திரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தமிழ்ச்செல்வன் மற்றும் அருமைச் செல்வத்துக்கும் காயம் ஏற்பட்டது. உடனடியாக எம்.பி.ராஜேந்திரன் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ராஜேந்திரனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு திரண்ட ராஜேந்திரனின் உறவினர்கள், உடலைப் பார்த்து கதறி அழுதனர்.

62 வயதான ராஜேந்திரனுக்கு சாந்தா என்ற மனைவியும், இரு மகள்கள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர். தற்போது சென்னையில் பணிபுரியும் அவரது மனைவி திண்டிவனம் சென்று கொண்டிருப்பதால், எம்.பி. ராஜேந்திரனின் உடற்கூறாய்வு இன்னும் தொடங்கவில்லை.

இதனிடையே, காரில் சீட் பெல்ட் அணியாத காரணத்தால் விபத்தின் போது ஏர் பேஃக் வேலை செய்யாமல் தலையில் பலமாக அடிபட்டு ராஜேந்திரன் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், தடுப்புச் சுவர் கட்டப்படுவது குறித்து முன் எச்சரிக்கை எதுவும் இல்லாததால், ஒரே வேகத்தில் சென்ற காரானது, திடீரென தொடங்கிய சாலை தடுப்பின் மீது மோதி பயங்கரமான விபத்துக்குள்ளாகி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திண்டிவனம் அரசு மருத்துவமனையில், ராஜேந்திரனின் உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் அதிமுக நிர்வாகிகள் நேரில் அஞ்சலி செலுத்தினர். மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அவர்கள், ராஜேந்திரனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

இதனிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அனைவரிடமும் விருப்பு, வெறுப்பின்று அன்புடன் பழகும் பண்பாளர் ராஜேந்திரன் எனக் கூறியுள்ளார். கட்சித் தலைமை மீது பற்றும், பாசமும், கட்சிக் கொள்கைகளின் மீது உறுதியும் கொண்டவர் ராஜேந்திரன் எனக் கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, அவரது இழப்பானது தொகுதி மக்களுக்கும், அதிமுகவிற்கும் பேரிழப்பு என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல் பாமக நிறுவனர் ராமதாசும், ராஜேந்திரன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அடித்தட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த ராஜேந்திரன், அரசியலில் படிப்படியாக முன்னேறியவர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஊராட்சித் தலைவராகவும், மக்களவை உறுப்பினராகவும் சிறப்பாக பணியாற்றி மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர் ராஜேந்திரன் என ராமதாஸ் கூறியுள்ளார்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...