பாமகவுக்கு தலைவலி தரும் காடுவெட்டி குடும்பத்தினர்!

பிப்ரவரி 26, 2019 460

சென்னை (26 பிப் 2019): பாமக - அதிமுக கூட்டணி பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ள நிலையில் காடுவெட்டி குரு குடும்பத்தினர் பாமகவுக்கு பெரும் தலைவலியாக இருப்பார்கள் என தெரிகிறது.

அதிமுக பாமக கூட்டணி ஏன்? என்று அன்புமணி, விளக்கம் அளித்து வருகிறார். ஆனால் அதனை பாமகவினரே ஏற்க தயாரில்லை.

ராமதாஸ் மீது குற்றச்சாட்டு இந்த நிலையில், வன்னியர் சங்க முன்னாள் தலைவர் மறைந்த காடுவெட்டி ஜெ.குருவின் குடும்பத்தினர், பாமக நிறுவனர் ராமதாஸுக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொண்டு வருவதால் பாமகவினர் மத்தியில் சற்று சலசலப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அரியலூர், கடலூர், பெரம்பலூர், சேலம், தருமபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில், காடுவெட்டி குருவுக்கு தனிப்பட்ட செல்வாக்கு உண்டு. அவர் உடல்நிலை மோசமான நிலையில், அவருக்கு சரியான சிகிச்சை அளிக்க ராமதாஸ் முன்வரவில்லை என்பது குரு குடும்பத்தினரின் குற்றச்சாட்டு. மேலும், வன்னியர் சங்க அறக்கட்டளை நிர்வாகத்தில் இருந்து குருவின் குடும்பத்தினரை வெளியேற்ற முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். சமீபத்தில் மயிலாடுதுறையில் வழுவூர்மணி எனும் விஜிகே மணி தலைமையில் வன்னியர் சங்கக் கூட்டம் நடந்தது. இதில், ‘‘உலகில் உள்ள வன்னியர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து புதிய வன்னியர் சங்கம் தொடங்கப்படும். குருவுக்கு கோயில் கட்டப்படும்’’ என்றுகுரு மகன் கனலரசன் தெரிவித்துள்ளார். பாமகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்யவும் குரு குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், பாமகவில் இருந்து வெளியேறி, தனி கட்சி தொடங்கியுள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனும், பாமகவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதால், அவரும் பாமகவின் கணிசமான வாக்குகளை பிரிப்பார் என்று கூறப்படுகிறது.

இந்த சூழலில், வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சியுடன், விஜிகேமணி தலைமையிலான ‘மாவீரன் ஜெ.குரு வன்னியர் சங்க அமைப்பு’ இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளது.

இவர்கள் வட தமிழகத்தில் பாமக போட்டியிடும் தொகுதிகளில் அவர்களுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தவும் முடிவு செய்துள்ளனர். குறிப்பாக அன்புமணி போட்டியிட்டால் அவருக்கு எதிராக ஜெ.குருவின் தாயாரை களத்தில் இறக்கவும் முடிவு செய்துள்ளனர். இது மட்டுமின்றி, பாமகவுக்கு ஆதரவு தரும் அதிமுகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்யவும்திட்டமிட்டுள்ளனர். இது பாமகவுக்குபெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...