பொள்ளாச்சியில் என்ன பிரச்சனை? - எனக்கு ஒன்னும் தெரியாது: இல கணேசன்!

மார்ச் 13, 2019 439

சென்னை (13 மார்ச் 2019): பொள்ளாச்சி பாலியல் விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதுகுறித்து எதுவுமே தெரியாது என்று பாஜக தலைவர்களில் ஒருவரான இல கணேசன் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வீடியோ எடுக்கப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டையில் பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``ராகுல்காந்தி தமிழகம் வந்திருக்கிறார். அவரால், இங்கு மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. ராகுல் எங்கெல்லாம் சென்று பேசுகிறாரோ... அங்கெல்லாம் மோடிக்கு ஆதரவான மனநிலைக்கு மக்கள் மாறுகிறார்கள். ராகுல்காந்தி பிரசாரம் செய்தாலே போதும், மோடி வெற்றிபெற்றுவிடுவார். ராகுல் அபத்தமான கருத்துகளை மக்கள் முன்வைப்பார். இதுதான் அவருடைய சரக்கு என மக்கள் புரிந்துகொள்வார்கள். ராகுலுக்கு சமமாகப் பேசுவதற்கு, தமிழகத்தில் ஒருவர் இருக்கிறார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க கூட்டணி வெற்றிபெற முயற்சி மேற்கொள்கிறோம்.

கடந்த முறை யார் யாரெல்லாம் வெற்றிபெற்றார்களோ அவர்கள் எல்லாம் ஒன்றாகக் கூட்டணி அமைத்திருக்கிறோம். பா.ம.க ஒரு தொகுதி, பா.ஜ.க ஒரு தொகுதி, மற்ற அனைத்து தொகுதிகளையும் அ.தி.மு.க கைப்பற்றியது. இப்போது நாங்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து மீண்டும் வெற்றிபெறுவோம். கடந்த முறை மோடி இதைச் செய்வார், அதைச் செய்வார் என்று வாக்குறுதிகளைச் சொல்லி வாக்கு கேட்டோம். இந்த முறை 5 ஆண்டுக்காலம் நாங்கள் வாழ்ந்துகாட்டியதைச் சொல்லி வாக்கு கேட்போம்’’ என்றார்.

பின்னர் செய்தியாளர்கள், பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் விவகாரம் செய்யப்பட்ட விவகாரம் பற்றி உங்களுடைய கருத்து என்ன என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘‘எனக்கு அந்த விவகாரம் பற்றி எதுவும் தெரியாது. தெரியாத விஷயத்தைப் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்’’ என்று கூறினார்.

இதற்கிடையே இதுபோன்ற செய்திகள் எல்லாம் தெரியாமல் ஏன் அரசியலுக்கு வந்தீர்கள்? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...