சென்னையிலும் ஒரு பொள்ளாச்சி சம்பவம்!

மார்ச் 14, 2019 383

சென்னை (14 மார்ச் 2019): தனது மனைவியும் வேறொருவரும் போனில் பேசிக் கொண்ட ஆடியோவை வெளியிட்டு ஒருவர் மிரட்டுவதாக ஆவடி போலீசில் திமுக பிரமுகர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து திமுக பிரமுகர் தெரிவிக்கையில், "ஆவடி அருகே உள்ள பகுதியில் நான் குடும்பத்தோடு குடியிருந்தேன். என்னுடைய அண்ணன்தான் தி.மு.க.வின் வட்டச் செயலாளராக இருந்தார். நான் பொருளாளராக இருக்கிறேன். அண்ணன் கவுன்சிலராக இருந்தார். இந்தச்சமயத்தில் கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது எங்கள் வார்டு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால் தி.மு.க. சார்பில் என் மனைவி கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

முதல் முறையாக அவர் கவுன்சிலரானார். இந்தச்சமயத்தில் 2017-ம் ஆண்டு ஆவடியில் நடந்த மாநாட்டுக்கு திருநின்றவூரிலிருந்து வந்த டிரைவருடன் என் மனைவிக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் போனில் பேசினர். இந்தச்சமயத்தில் 9.8.2017 அன்று எங்கள் வீட்டின் அருகில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அந்த நிகழ்ச்சியை என் மனைவி தன்னுடைய செல்போனில் போட்டோ எடுத்தார். அப்போது பட்டாபிராமைச் சேர்ந்த ஒருவர் என் மனைவியிடம் நிகழ்ச்சியின் போட்டோ வேண்டும் என்று கேட்டுள்ளார். உடனே என் மனைவி தன்னுடைய செல்போனை அவரிடம் கொடுத்துள்ளார். செல்போனில் உள்ள போட்டோவை எடுத்த அந்தநபர், என் மனைவியும் திருநின்றவூரைச் சேர்ந்த டிரைவரும் பேசிய ஆடியோவை டவுன்லோடு செய்துள்ளார்.

இந்த நிலையில், இந்த ஆடியோ சில மாதங்களுக்கு முன் ஆவடி நகராட்சியில் உள்ள கட்சியினருக்கு அனுப்பப்பட்டது. இதுகுறித்து தகவல் எனக்கு தெரியவந்ததும் என் மனைவியிடம் விவரம் கேட்டேன். அதன்பிறகுதான் திருநின்றவூரைச் சேர்ந்தவருடன் என் மனைவிக்கு பழக்கம் இருந்த தகவல் எனக்குத் தெரியவந்தது. இதையடுத்து, பட்டாபிராம் காவல் நிலையத்தில் என் மனைவி புகார் கொடுத்தார். மனு ஏற்பு சான்றிதழ் மட்டும் கொடுத்தனர். அதன்பிறகு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சென்னை கமிஷனர் அலுவலகத்திலும் புகார் கொடுத்தேன். அங்கும் ஆடியோவை அனுப்பிய நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதற்கிடையில் என் மனைவியிடம் ஆடியோவை வெளியிடுவதாகக் கூறி நகராட்சியில் பணியாற்றும் அந்தநபர் என்னிடமிருந்து பணத்தைப் பறித்தார். தற்போது மீண்டும் பணம் பறிக்கும் நோக்கத்தில் ஆடியோவை புதிய நம்பரிலிருந்து வெளியிட்டுள்ளார்'' என்று தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி சம்பவம் பற்றி எரியும் நிலையில் தற்போது ஆவடி விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...