நக்கீரன் கோபாலுக்கு அனுப்பிய சம்மனை திரும்பப் பெற வேண்டும் - ஜவாஹிருல்லா!

மார்ச் 14, 2019 292

சென்னை (14 மார்ச் 2019): பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை அம்பலப் படுத்திய நக்கீரன் கோபாலுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ள நிலையில் அதனை திரும்பப் பெற வேண்டும் என்று மமக தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மமக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பொள்ளாச்சியில் 20 நபர்களைக் கொண்ட வக்கிரக்கும்பலால் 200க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு 1500க்கும் மேற்பட்ட காணொளிகள் தயாரிக்கப்பட்ட கொடுங்கோண்மை தமிழகத்தை மீள முடியாத துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள், குடும்பத் தலைவிகள் என பலதரப்பட்ட பெண்களும் இந்த காம பயங்கரவாதிகளின் சதிவலையில் வீழ்ந்துள்ளனர்.

தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள இந்த செயலை பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் அவர்கள் ஒரு காணொளி மூலம் வெளியுலகிற்குக் கொண்டுவந்து இந்தப் பிரச்சினையில் நடைபெற்ற அநியாயங்களை வெளிப்படுத்தியுள்ளார். அதன் அடிப்படையிலேயே அந்த விவகாரம் சிபிஐ விசாரணை வரை சென்றுள்ளது.

இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் அவர்கள் நக்கீரன் கோபால் பொள்ளாச்சி சம்பவம் தொடர்பான காணொளிகளை வெளியிட்டது தவறு எனக் கூறி சென்னை காவல்துறையில் புகார் செய்துள்ளதின் அடிப்படையில் நாளை கோபாலை சென்னைப் பெருநகர காவல்துறை குற்றப்பிரிவு, விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பியுள்ளது.

சென்னை காவல்துறையின் இந்த நடவடிக்கையை மனிதநேய மக்கள் கட்சி கண்டிக்கிறது. நக்கீரன் கோபால் வெளியிட்ட காணொளியில் எந்த இடத்திலும் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரையோ, அவரது முகங்களையோ வெளியிடவில்லை, ஒரு பத்திரிக்கையாளராக நக்கீரன் கோபால் தனது கடமையை நிறைவேற்றியுள்ளார்.

ஆனால் உச்சநீதிமன்ற உத்தரவுகளை மீறி பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை வெளியிட்டு இந்த பாலியல் வன்முறை சம்பந்தமாக வேறு யாரும் புகார் அளிக்கக்கூடாது என மிரட்டும் விதமாக கோவை காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றனர்.

நக்கீரன் கோபால் மீது புகார் பதிவு செய்து அவரை விசாரணைக்கு அழைத்திருப்பது என்பது பத்திரிகைச் சுதந்திரம் நசுக்கும் செயலாகும். இது தமிழகத்தில் ஊடக ஜனநாயகம் கேள்விக்குறி ஆக்கப்பட்டுள்ளது என்பதன் அடையாளமாகவும் அமைந்துள்ளது.

உண்மைகளை உரக்கச் சொல்லும் நக்கீரன் கோபாலுக்கு உறுதுணையாக நாங்கள் செயல்படுவோம் என்று தெரிவித்து, சென்னை பெருநகர காவல்துறை உடனே நக்கீரன் கோபால் மீதான சம்மனை உடனே திரும்பப் பெற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...