பொள்ளாச்சியில் அடுத்த அதிர்ச்சி - கல்லூரி மாணவி படுகொலை!

ஏப்ரல் 07, 2019 543

பொள்ளாச்சி (07 ஏப் 2019): பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி படுகொலை செய்யப் பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ராகவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. பைனான்சியர். இவருடைய மகள் பிரகதி (20). இவர் கோவை ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் கல்லூரியில் இருந்து வெளியே சென்றவர் மாயமானார். மாணவியின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. மாணவி தொடர்பான எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர் கோவை காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். காட்டூர் போலீசார் மாணவி மாயம் என்று வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடிவந்தனர்.

இந்நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள பூசாரிப்பட்டியில் ரோட்டோரத்தில் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் நேற்று மாலை 4 மணிக்கு அரை நிர்வாண கோலத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து கோமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

இதற்கிடையில் ஓட்டன்சத்திரத்தில் இருந்து அந்த வழியாக காரில் கேரளா மாநிலம் சாலக்குடிக்கு சென்ற கோமதி என்ற பெண் ரோட்டோரத்தில் பொதுமக்கள் கூட்டமாக நிற்பதை பார்த்தார். இதையடுத்து தனது கணவர் கார்மேகத்தை காரை நிறுத்தி சொல்லி விட்டு, இறங்கி சென்று பார்த்தார். அப்போது அவர் இறந்து கிடப்பது தனது சொந்த ஊரான ஓட்டன்சத்திரம் அருகே உள்ள ராகவநாயக்கன்பட்டியை சேர்ந்த வெள்ளைசாமி என்பவருடைய மகள் பிரகதி என்று உறுதி செய்தார். இதை தொடர்ந்து போலீசார் மாணவியின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்களும் பூசாரிபட்டிக்கு விரைந்து வந்தனர். தங்களுடைய மகள் பிரகதிதான் என்பதை அறிந்து கதறிதுடித்தனர். மாணவியை மர்ம ஆசாமிகள் காரில் கடத்திச்சென்று கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

மாணவி பிரகதிக்கு வரும் ஜூன் மாதம் 13-ந்தேதி திருமணம் நடத்த ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வந்தநிலையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், இந்த கொலையில் ஈடுபட்ட கொலையாளிகள் தொடர்பான முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளது. எனவே கொலையாளிகளை விரைவில் பிடித்துவிடுவோம். அவர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தனர்.

பொள்ளாச்சியில் ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கல்லூரி மாணவி கடத்திச்செல்லப்பட்டு பொள்ளாச்சி பகுதியில் கொலை செய்யப்பட்டது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...