வீரமணி பிரச்சாரம் செய்வதில் சிக்கல்!

ஏப்ரல் 10, 2019 265

சென்னை (10 ஏப் 2019): திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பிரச்சாரம் செய்ய நீலகிரி மாவட்ட காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

கிருஷ்ணர் குறித்து அவதூறாக பேசியதாக வீரமணி மீது குற்றச் சாட்டு எழுந்தது. இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவினர் வீரமணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நீலகிரி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளராக ஆ.ராசா போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நேற்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, குன்னூர் மற்றும் கூடலூர் பகுதியில் பிரச்சாரம் செய்வதாக இருந்தது.

இதற்காக திராவிடர் கழகத்தினர் நேற்று குன்னூர் டிஎஸ்பி பிரசாத்திடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்தனர். ஆனால் அதற்கு முன்பே இந்து முன்னணியின் நீலகிரி மாவட்ட தலைவர் மஞ்சுநாத், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம், கடந்த மாதம் 22ம் தேதி சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணரை பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தோடு தொடர்புப்படுத்தி கி.வீரமணி பேசியுள்ளதாக புகார் அளித்தார்.

மேலும் மஞ்சுநாத் தனது புகாரில், வீரமணியை நீலகிரியில் பிரச்சாரம் செய்ய அனுமதித்தால், அமைதி சீர்குலையும் என்றும் எனவே அவரை இங்கு பிரச்சாரம் செய்ய அனுமதிக்கக்கூடாது எனறும் கோரியிருந்தார். இதனால் குன்னூர் மற்றும் கூடலூரில் வீரமணி பிரச்சாரம் செய்ய நீலகிரி காவல்துறை நேற்று அனுமதி வழங்கவில்லை.

ஏற்கனவே வீரமணி இந்து கடவுள் குறித்து பேசியது தவறுதான் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...