மோடிக்கு மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது - ராகுல் காந்தி அதிரடி!

ஏப்ரல் 13, 2019 210

தேனி (13 ஏப் 2019): மோடிக்கு பெரியாரின் புத்தகங்களை பரிசளிப்பேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்ட நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்ய, நேற்று மதியம் தேனிக்கு ராகுல் காந்தி வந்தார். அன்னஞ்சிவிலக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள பொதுக்கூட்டத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்தார்.

``மத்தியில் ராகுல்தான் பிரதமர். தமிழ்நாட்டில் ஸ்டாலின்தான் முதல்வர்" என்றார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன். பின்னர் பேசிய ராகுல் காந்தி,``காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை ஒரு தனி மனிதனின் குரல் அல்ல, ஒட்டுமொத்த தேசத்தின் குரல். தனி மனிதன் தயாரித்தது அல்ல. சமூகத்தின் பல அடுக்குகளில் உள்ள அனைவரும் இணைந்து, கலந்துபேசி உருவாக்கப்பட்டது.

பணத்தை உங்களிடம் இருந்து பிடுங்கி, நீரவ் மோடி, மல்லையா போன்ற மோடியின் நண்பர்களிடம் மோடி கொடுத்தார். மக்கள், வாங்கும் சக்தியை இதனால் இழந்தார்கள். தொழிற்சாலைகள் உற்பத்தியை நிறுத்தி, ஒருகட்டத்தில் மூடினார்கள். இதனால், வேலைவாய்ப்பு இல்லாமல்போனது. திருப்பூர், காஞ்சிபுரம் இன்று மோடியால் முழுவதும் முடங்கியுள்ளன. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் மூடப்பட்ட தொழிற்சாலைகள் அனைத்தும் இயங்கும். மோடியைத் தவிர. மோடி எப்போது மகிழ்ச்சியாக இருப்பார் என்றால், கோடிகளை எடுத்து கோடீஸ்வரர்களிடம் கொடுக்கும்போதுதான். மக்களிடையே வெறுப்பு அரசியலை விதைக்கிறார் மோடி. நாங்கள் அன்பை உள்ளடக்கிய அரசியலைச் செய்கிறோம். நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கும்போது, மோடி சக்தி இழந்துவிடுவார். நாம், வெறுப்பு அரசியல் மூலமாக, அவரின் வெறுப்பு அரசியலை எதிர்க்கப்போவதில்லை. அன்பு, மரியாதை போன்ற அரசியல் மூலமாக எதிர்க்க இருக்கிறோம்.

டெல்லியில் இருந்துகொண்டு தமிழ்நாட்டை இயக்கலாம் என்று நினைக்கிறார். அவர் நினைப்பதை இங்கு நிறைவேற்ற முடியும் என்று நினைக்கிறார். தமிழத்தைப் பற்றியும் தமிழின் தொன்மையையும், இனிமையும் பற்றி தெரியாது. பெரியாரின் புத்தகத்தை அவருக்கு கொடுக்க விரும்புகிறேன். பிறகாவது, தமிழ்நாட்டைப் பற்றி அவர் புரிந்துகொள்வார். பிறகு, கலைஞர் கருணாநிதியின் புத்தகத்தைக் கொடுப்பேன். தமிழக மக்கள், தங்கள் வரலாற்றை அவர்களே நிர்ணயிக்கிறார்கள். மோடி ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் விரும்பாததை அவர்களைச் செய்யவைக்க முடியாது. தமிழக மக்களை தொடர்ந்து அவமதிப்பதை நாங்கள் பொறுத்துக்கொள்ள முடியாது. தமிழக விவசாயிகள் டெல்லியில் போராடியதை நான் பார்த்தேன். நேரில் பார்த்து அவர்களைத் தழுவிக்கொண்டேன். நான் உங்களோடு நிற்கிறேன் என்றேன். நாங்கள் ஆட்சியில் இருக்கும் அனைத்து மாநிலத்திலும் விவசாயக் கடனை ரத்துசெய்திருக்கிறோம். ஆனால், மோடி, 3 லட்சம் கோடி ரூபாய், 15 கோடீஸ்வரர்களின் கடனை தள்ளுபடிசெய்தார். 2019 தேர்தல் முடிந்த பிறகு, விவசாயிகளுக்கு நன்மை செய்வோம், விவசாயிகள் தன்னம்பிக்கையோடு வாழ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் உங்களோடு இருக்கிறோம்.

எங்களின் முதல் நிதிநிலை அறிக்கையில், பிரத்யேக விவசாய நிதிநிலை அறிக்கை தாக்கல்செய்வோம். ஒவ்வொரு விவசாயிக்கும் அவர்களுக்கு என்ன செய்ய இருக்கிறோம் என்பதை முன்னரே சொல்வோம். அதில் நாங்கள் குறைந்தபட்ச ஆதாரவிலை மற்றும் ஊக்கத்தொகை எவ்வளவு என்று முன்னரே சொல்லிவிடுவோம். உலகத்தில் உள்ள மிகச்சிறந்த தொழில்நுட்பங்களை அந்த அறிக்கையில் குறிப்பிடுவோம். 45,000 கோடி ரூபாய், அனில் அம்பானி கடன் வாங்கி இருக்கிறார். ஆனால், விவசாயி, 20 ஆயிரம் ரூபாய், 40 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி கட்டமுடியவில்லை என்றால், பிடித்து ஜெயிலில் அடைக்கிறார்கள். எனவே, அந்த முறையை நாங்கள் மாற்ற இருக்கிறோம். 2019 தேர்தலுக்குப் பிறகு. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், விவசாயி கடனை கட்டமுடியவில்லை என்றால், சிறைக்குச் செல்ல மாட்டார். அதிகாரி சிறையில் அடைத்தால், அந்த அதிகாரிக்கு குற்றவியல் சட்டப்பட்டி தண்டனை கொடுப்போம்.

இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற நடவடிக்கை பாதித்திருக்கிறது. மத்திய அரசில் 22 லட்சம் காலியிடம் உள்ளன. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், முதல் ஓராண்டிற்குள், அந்தக் காலியிடங்கள் நிரப்பப்படும். பட்டியலின மக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும். பஞ்சாயத்துகளில் 10 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளன. இளைஞர்கள் தொழில் தொடங்க வேண்டும் என்றால், அரசு அலுவலகங்களுக்கு அலைந்து திரிய வைண்டும். லஞ்சம் கொடுக்க வேண்டும். ஆனால், 2019-க்கு பிறகு, எந்த இளைஞனும் எந்த அரசு அலுவலகத்திற்கும் சென்று அனுமதி பெறவேண்டியதில்லை. லஞ்சம் கொடுக்க வேண்டாம். மூன்று ஆண்டுகள் வெற்றிகரமாக அந்தத் தொழிலை நடத்திய பிறகு அனுமதி பெற்றுக்கொள்ளலாம்.

தமிழகத்தின் எதிர்காலத்தை தமிழர்களே நிர்ணயிப்பார்கள். இந்தக் கூட்டணி, அரசியல் கூட்டணி மட்டுமல்ல... மிகப்பெரிய காரியத்தை செய்துகாட்ட வேண்டும் என்பற்கான கூட்டணி. 72 ஆயிரம் ரூபாய் பணம், அந்தக் குடும்பத்தின் பெண்களின் பெயரில்தான் வரவு வைக்கப்படும். நாடாளுமன்றத்தின் இரு சபைகளில் 33% இட ஒதுக்கீடு பெண்களுக்கு கொடுக்கப்படும். மத்திய அரசுப் பணியிடங்களில் 33% பெண்களுக்காக ஒதுக்கப்படும். எப்போது தமிழகத்திற்கு வந்தாலும், நீங்கள் காட்டும் அன்பும் பாசமும் என்னை உற்சாகத்தோடு திரும்பிச்செல்ல வைக்கிறது!" என்று கூறி தனது உரையை முடித்தார் ராகுல் காந்தி.

அவரின் ஆங்கிலப் பேச்சை பீட்டர் அல்போன்ஸ் மொழிபெயர்த்தார். இந்தக் கூட்டத்தில், தேனி தொகுதி முன்னாள் எம்.பி ஆரூண், தமிமுன் அன்சாரி, தி.மு.க-வின் ஐ.பெரியசாமி மற்றும் பெரியகுளம் தி.மு.க வேட்பாளர் சரவணகுமார், ஆண்டிபட்டி தி.மு.க வேட்பாளர் மகாராஜன் ஆகியோர் இருந்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...