பச்சை பொய் சொல்லித் திரிகிறார் டிடிவி தினகரன் - ஜவாஹிருல்லா பொளேர் பதில்!

ஏப்ரல் 13, 2019 484

திருச்செந்தூர் (13 ஏப் 2019): அமுமுகவிடம் சீட் கேட்டதாக டிடிவி தினகரன் பொய் தகவல் அளித்து வருகிறார் என்று மமக தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா திருச்செந்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்தியா தொடர்ந்து ஜனநாயக மதசார்பற்ற நாடாகவும், பன்முக மக்களையும் அரவணைத்துச் செல்கிற ஒரு நாடாகவும், மாநிலங்களின் உரிமைகளை அங்கீகரிக்க கூடிய நாடாகவும் தொடருமா என்பதை நிர்ணயிக்கும் ஒரு தேர்தலாகத்தான் இந்த தேர்தல் உள்ளது. இந்நிலையில் அ.ம.மு.க., துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசும்போது, தி.மு.க., எங்களுக்கு சீட் தராததால் அவருடைய கட்சியை அணுகி அவரிடம் நாங்கள் சீட் கேட்டதாக ஒரு தவறான பச்சை பொய்யை பேசி வருகிறார்.

டி.டி.வி., தினகரன் தரப்பில் இருந்து யாரும் என்னை அணுகிப் பேசவும் இல்லை. நானும் அவரது கட்சி நிர்வாகிகளையோ தினகரனையோ அணுகி எங்களுக்கு தி.மு.க., சீட் தரமறுத்து விட்டது. எனவே, நீங்கள் எங்களுக்கு சீட் தரவேண்டும் என எந்த ஒரு பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. மனித நேய மக்கள் கட்சிக்கு இந்த தேர்தலில் போட்டியிட தி.மு.க., வாய்ப்பு அளிக்கவிட்டாலும்கூட கட்சியின் நலனை விட நாட்டின் நலன் முக்கியமானது என்று கருதி நாங்கள் பிரசாரம் செய்துவருகிறோம்.கடந்த காலங்களில் டி.டி.வி., தினகரன் பா.ஜ.க.,வுடன் நாங்கள் கூட்டணி வைக்கமாட்டோம் என்று சொல்லிவிட்டு ஜனாதிபதி தேர்தல் வந்த போது பா.ஜ.க., வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்தார்.

அதேபோல் துணை ஜனாதிபதி தேர்தலிலும் ஆதரவளித்தார். அது மட்டுமல்ல, காவேரி பிரச்னையில் தமிழகத்தில் பெரும்பாலான அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும், மோடி தமிழகத்திற்கு வந்தபோது, ”கோ பேக் மோடி” என்ற அறப் போராட்டத்தை நடத்தினோம். ”அப்படிப்பட்ட போராட்டம் தேவையில்லை” என்று சொன்னவர்தான் தினகரன். இப்போதும் கூட பா.ஜ.க., தலைவர்களைச் சந்தித்து பேச வேண்டும் என விருப்பத்தைத் தினகரன் சொன்னதாக தெரிவித்துள்ள பொன்.ராதாகிருஷ்ணனின் ஆதரவாளரான கருப்பு முருகானந்தம், தன்னிடம் அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறியுள்ளார். எனவே, மறைமுகமாகப் பா.ஜ.க.,விற்கு ஆதரவாகச் செயல்படும் டி.டி.வி. தினகரன் அவதூறாகப் பேசுவதை நிறுத்த வேண்டும்.

தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேட்டி ஒன்றில், ”தேர்தலுக்கு பின்பு பா.ஜ.க.,வுடன் கூட்டணி வைப்பீர்களா?” என கேட்டதற்கு, ”எங்கள் கூட்டணியின் பெயரே மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி என்றும், பா.ஜ.க.,வுடன் ஒரு போதும் கூட்டணி வைக்க மாட்டோம்” என்று தெளிவுபடுத்தி உள்ளார். அது மட்டுமில்லாமல். கோவையில் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கு கொண்ட கூட்டத்தில், ”அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை பகைவர்களும் இல்லை. ஆனால் எங்களுக்கு அரசியலில் நிரந்தர கொள்கை எதிரிகள் உண்டு. அந்த கொள்கை எதிரி நரேந்திர மோடியும் பா.ஜ.க.,வும்தான்.” எனத் தெளிவாக கூறியிருக்கிறார். சிறுபான்மை மக்களுளின் ஆதரவு தி.முக கூட்டணிக்கு ஒட்டு மொத்தமாக இருக்கிறது. வரும் தேர்தலில் தி.மு.க., கூட்டணிக்கட்சிகள் வெற்றி பெறும்.” என்றார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...