பொன்பரப்பி தலித்கள் மீதான தாக்குதலை எதிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம்!

ஏப்ரல் 20, 2019 310

சென்னை (20 ஏப் 2019): பொன்பரப்பியில் தலித் மக்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பில் உள்ள தலித் மக்கள் தங்கள் வீட்டு சுவர்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவனின் சின்னமான பானை சின்னத்தை வரைந்திருந்ததால் அப்பகுதிக்குள் புகுந்த வன்னிய மக்கள் சிலர் வீடுகளை அடித்து நொறுக்கினர். மேலும் அங்கிருந்த சில தலித் மக்களையும் தாக்கினர். இதனால் நேற்று முன் தினம் பரபரப்பான சூழல் உருவானது. தாக்குதலில் காயம்பட்டவர்கள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான தொல் திருமாவளவன் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘தோல்வி பயத்தால் தமிழகத்தின் பல இடங்களில் அதிமுக கூட்டணியினர் இதுபோன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தின் சில இடங்களில் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றவும் முயன்றுள்ளனர். அரியலூர் மாவட்டம் முழுவதும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. பாமகவினரின் இந்த வன்முறைப் போக்கை தமிழக அரசும் காவல்துறையும் மெத்தனமாகக் கையாண்டுள்ளனர். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கூட்டணிக் கட்சி தலைவர்களை ஒருங்கிணைத்து அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் வரும் 24 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நான் கலந்து கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...