மதுரையில் வாக்குப் பெட்டி அறைக்குள் சென்ற மர்ம நபர் யார்?

ஏப்ரல் 21, 2019 436

மதுரை(21 ஏப் 2019): மதுரையில் வாக்குப் பெட்டி அறைக்குள் மர்ம நபர் ஒருவர் நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நிறைவுபெற்று, வாக்குப் பெட்டிகள் அந்தந்த தொகுதிகளிலுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன. மதுரை தொகுதிகுப்பட்ட வாக்கு இயந்திரங்கள், மாவட்ட அரசு மருத்துவமனைக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இன்று இரவில் வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறைக்கு அருகில் பெண் அதிகாரி ஒருவர் சென்றுள்ளார். அவர், அங்கிருந்து வாக்காளர்கள் குறித்த தகவல்கள் எடுத்து, அதனை ஜெராக்ஸ் எடுத்துவிட்டு, மீண்டும் அங்கேயே வைத்துள்ளார்’ என்று எதிர் கட்சிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனையடுத்து, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் அவரது ஆதரவாளர்களுடன் வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டிருக்கும் இடத்துக்கு சென்று காவல்துறையினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

சி.சி.டி.வி காட்சிகளைத் தங்களுக்கு காண்பிக்க வேண்டும் என்று கோரிக்கைவைத்தார். அதனையடுத்து, அ.ம.மு.க வேட்பாளர் அண்ணாதுரையும் அவரது ஆதரவாளர்களுடன் அங்கே சென்றார். அதனையடுத்து, அரசியல் கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனால், வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே வாக்குப் பெட்டி உள்ள இடங்களில் சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை என்று காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி குற்றஞ் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...