ஃபேஸ்புக்கால் ஏற்பட்ட நட்பு படுக்கை வரை சென்ற விபரீதம்!

ஏப்ரல் 25, 2019 540

நாகர்கோவில் (25 ஏப் 2019): கல்லூரி மாணவியிடம் பேஸ்புக் மூலம் நட்பாக பழகி பின்னர் அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் இளம்பெண் ஒருவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நெல்லை மாவட்டம் ஆவரைக் குளத்தைச் சேர்ந்த ஏசுநேசன் என்பவருடன் கல்லூரி மாணவிக்கு பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் பேஸ்புக், வாட்ஸ் ஆப்-இல் உரையாடி பழகி வந்துள்ளனர்.

ஏசுநேசனுக்கு ஒரு கை கிடையாது. அவர் தான் ஒரு மாற்றுத்திறனாளி என்பதை அந்த பெண்ணிடம் மறைத்துப் பழகி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் ஏசுநேசன், அந்த கல்லூரி மாணவியை தான் காதலிப்பதாக தெரிவிக்க மாணவி அதை ஏற்க மறுத்துள்ளார். ஏசுநேசனின் தொடர் வற்புறுத்தலால் கல்லூரி மாணவியும் அவரைக் காதலிக்கத் தொடங்கியுள்ளார். இருவரும் தங்கள் புகைப்படங்கள் உள்ளிட்ட விவரங்களை பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப் மூலம் பரிமாறிக் கொண்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் காதல் வளர்த்து வந்த நிலையில், ஏசுநேசன் மாணவியை நேரில் சந்தித்துப் பேச விரும்புவதாகக் கூறியுள்ளார். மாணவியும் அதற்கு சம்மதிக்கவே, ஏசுநேசன் ஒரு காரில் நாகர்கோவில் வெள்ளமடம் பகுதிக்கு சென்றுள்ளார். மாணவி காரில் ஏறிய போது அதில் இன்னொரு நபரும் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்

பின்னர், அவர்கள் இருவரும் மாணவியை காரில் ஏற்றிக் கொண்டு ஆற்றங்கரை பள்ளிவாசல் பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு ஆளில்லாத இடத்தில் காரை நிறுத்தி விட்டு, மாணவியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயன்றுள்ளனர்.

மாணவி கத்திக் கூச்சல் போடவே அவரிடம் இருந்து 2 பவுன் நகைகளை இருவரும் பறித்துக் கொண்டனர். பின்னர் மாணவியை காரில் ஏற்றி அஞ்சுகிராமத்தில் கொண்டு வந்து விட்டுவிட்டு தப்பியோடி விட்டனர்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். புகாரின் பேரில், நெல்லையில் பதுங்கியிருந்த ஏசுநேசன் மற்றும் ஆதீஷ் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஏசுநேசனுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே திருமணமானது தெரியவந்துள்ளது.

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் நட்பு ஏற்படுத்திக் கொள்வது பாதகமல்ல. ஆனால் முகம் தெரியாத அந்த நபரைப் பற்றி எதுவும் தெரியாமல், தகவல்கள் அளிக்க கூடாது. வெளியில் செல்லக் கூடாது என போலீசார் பலமுறை எச்சரித்தும் போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...