குழந்தை கடத்தலில் முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு?

ஏப்ரல் 28, 2019 332

ராசிபுரம் (28 ஏப் 2019): கடந்த வாரம் பரபரப்பை ஏற்படுத்திய குழந்தை கடத்த ஆடியோ விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதில் பல முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். ராசிபுரம் நகர கூட்டுறவு வங்கியில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அமுதவள்ளி. இவர் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் நர்ஸாகப் பணியாற்றி, கடந்த 2012-ம் ஆண்டு விருப்ப ஓய்வுபெற்றார். அதன் பிறகு இவர், குழந்தைகளைச் சட்டவிரோதமாக வாங்கி விற்பனை செய்துவந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு அமுதவள்ளி, 'சதீஸ்குமார் என்பவரிடம் செல்போனில் பேசிய ஆடியோ ஒன்று வாட்ஸ்அப்பில் வைரலாகப் பரவியது. அந்த ஆடியோவில் அமுதவள்ளி, ’நான் 30 ஆண்டுகளாகக் குழந்தைகளை வாங்கி விற்பனை செய்துவருகிறேன். பெண் குழந்தையாக இருந்தால் ரூ.2½ லட்சம்முதல் ரூ.3½ லட்சம்வரையிலும், ஆண் குழந்தையாக இருந்தால் ரூ.4 லட்சம்முதல் ரூ.4½ லட்சம்வரையிலும் விற்றுவருகிறேன்.

இதனை வெளியில் கூற வேண்டாம். பிறப்புச் சான்றிதழ் வேண்டுமானால், ராசிபுரம் நகராட்சியிலிருந்து வாங்கித் தருகிறேன். அதற்கு ரூ.70,000 வரை செலவாகும்’ என்று கூறியுள்ளார். இந்த ஆடியோ வாட்ஸ்அப்பில் வெளியானதைத் தொடர்ந்து, கலெக்டர் ஆசியா மரியம் உத்தரவின் பேரில், நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு மேற்பார்வையில், ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன், போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லமுத்து ஆகியோர் செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகிய 2 பேரையும் கைதுசெய்து விசாரணை நடத்தினர்.

இதில் கொல்லிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடக்கும் பிரசவங்கள் குறித்து ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன் அவ்வப்போது அமுதவள்ளிக்குத் தகவல் கொடுத்து வந்ததாகவும் அதன்பேரில் அமுதவள்ளி குழந்தைகளின் பெற்றோரைத் தொடர்புகொண்டு குழந்தைகளை விலைக்கு வாங்கி விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. இதற்கிடையில், நாமக்கல் சுகாதாரத் துறை உதவி இயக்குநர் டாக்டர் ரமேஷ்குமார் உத்தரவின் பேரில், ஒரு மருத்துவ அலுவலர், ஒரு வட்டார சுகாதார மேற்பார்வையாளர், 2 சுகாதார ஆய்வாளர்கள், 1 வட்டார புள்ளியியல் அலுவலர் உள்பட 15 பேர் அடங்கிய குழுவினர் ராசிபுரத்தில் உள்ள 8 தனியார் ஆஸ்பத்திரிகள், அரசு ஆஸ்பத்திரிகளில் கடந்த 2 ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளின் பிறப்புச் சான்று விவரங்களைக் கள ஆய்வு செய்தனர்.

ராசிபுரம் அரசு மருத்துவமனையில் கடந்த 2017-ம் ஆண்டு பிறந்த 980 குழந்தைகளின் பிறப்புச் சான்றுகளை நேற்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும், 2 ஆண்டு சான்றிதழ்களும் ஆய்வு செய்யப்படுகிறது. ராசிபுரம் நகராட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் 4,800 குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளதாகவும் அதில், ஏதேனும் முறைகேடு நடந்துள்ளதா என்பது பற்றியும் சுகாதாரத் துறையினர் ஆய்வுசெய்து வருகின்றனர். இதற்கிடையில் கைதான அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகியோர் ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி மாலதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். ராசிபுரத்தில், குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...