உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு!

மே 03, 2019 282

புதுடெல்லி (03 மே 2019): உச்சநீதிமன்றத்தில் இன்று தி.மு.க. சார்பில் 3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்க கோரி முறையீடு செய்யப்பட்டது.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரத்தின சபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூவரும் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள். சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் அவர்கள் 3 பேரும் டி.டி. வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததாக கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து அவர்கள் 3 பேர் மீதும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் தனபாலிடம் அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் புகார் அளித்தார். அதன் பேரில் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூன்று பேருக்கும் சபாநாயகர் தனபால் நோட்டீசு அனுப்பி உள்ளார்.

ஒரு வாரத்துக்குள் மூன்று எம்.எல்.ஏ.க்களும் தங்களது நிலை பற்றி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சபாநாயகர் தனபால் கடந்த செவ்வாய்க்கிழமை அனுப்பி உள்ள நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

அந்த நோட்டீசு அனுப்பப்பட்ட சில மணி நேரத்துக்குள் சட்டசபை செயலாளரிடம் தி.மு.க. சார்பில் ஒரு மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், “சபாநாயகருக்கு எதிராக தி.மு.க. நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதாகவும் உடனே அதை எடுத்துக் கொள்ள வேண்டும்” என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் 3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்க கோரி முறையீடு செய்யப்பட்டது. இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி அமர்வில் திமுக சார்பில் முறையீடு செய்யப்பட்டது.

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்துள்ளதால் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டது.

இதையடுத்து தி.மு.க.வின் கோரிக்கையே ஏற்று திங்கட்கிழமை வழக்கை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...