ஒருபக்கம் புயல் இன்னொரு பக்கம் வெயில்!

மே 04, 2019 291

புதுடெல்லி (04 மே 2019): ஒடிசாவை நேற்று தாக்கிய ஃபானி புயல் மேற்கு வங்கம் வழியே வங்கதேசத்தை நோக்கி நகர்கிறது. அதேவேளை தென் மாநிலங்களில் அக்னி நட்சத்திரம் வெயில் இன்று தொடங்கியது.

வங்க கடலில் உருவான ஃபானி புயல் சூறாவளியாக மாறி நேற்று (வெள்ளிக்கிழமை) காலை ஒடிசா கடற்கரையை கடக்க துவங்கியது. காற்றின் வேகம் மணிக்கு 200 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் ஒடிசாவை தாக்கியது. இதில் பல மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான மரங்கள் சாய்ந்துள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன. புயலால் ஏற்பட்ட விபத்துகளில் 3 பேர் பலியாகினர். பல பகுதிகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தில் கோரத்தாண்டவம் ஆடிய ஃபானி புயல் நேற்று நள்ளிரவு மேற்கு வங்க மாநிலத்தை அடைந்தது.

இன்று (சனிக்கிழமை) காலை மணிக்கு 90 கிமீ வேகத்தில் வட-கிழக்கு நோக்கி ஃபானி புயல் நகர்ந்தது. எங்கெல்லாம் ஃபானி புயல் நகருகிறதோ, அங்கெல்லாம் பலத்த சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதற்கிடையே தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்று முதல் தொடங்கிறது. இந்த அக்னி நட்சத்திரம் வரும் மே 29 ஆம் தேதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கத்திரி வெயிலின் காலத்தில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவி வருகிறது.

இந்த ஆண்டு பருவமழை போதுமான அளவு பெய்யாத நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வேலூர், சேலம், கரூர், திருத்தணி, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, பாளையங்கோட்டை போன்ற நகரங்களில் வெயில் அளவு 100 டிகிரியை தாண்டியது. இந்த வெயில் சுமார் 26 நாட்கள் இருக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...