கடலூர் அருகே மீண்டும் சாதி மோதல் - ராமதாஸ் கண்டனம்!

மே 04, 2019 255

கடலூர் (04 மே 2019): கடலூர் அருகே குச்சிப்பாளையத்தில் மீண்டும் சாதி மோதல் வெடித்துள்ளது. இதற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட குச்சிப்பாளையம் கிராமத்தின் மீது, அருகிலுள்ள மேல்கவரப்பட்டைச் சேர்ந்த கும்பல் ஆயுதங்களுடன் படையெடுத்துச் சென்று தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் குச்சிபாளயத்தை சேர்ந்த வன்னியர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டுள்ளன. குச்சிப்பாளையம் மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யார், அதற்கான காரணம் என்ன என்பதை வெளிப்படையாக விளக்க வேண்டும். குச்சிப்பாளையம் வன்னியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டிக்க வேண்டும். இதற்கு காரணமான கும்பலை தண்டிக்க வேண்டும்”, என்று கூறியுள்ளார்.

கடலுார் பா.ம.க. வேட்பாளர் கோவிந்தசாமி நேற்று பாதித்த பகுதி மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன் பா.ம.க. மாநில துணை செயலாளர் தாமரைக்கண்ணன், மாநில நிர்வாக குழு உறுப்பினர், தர்மலிங்கம், மாவட்ட செயலாளர் ஆறுமுகம், முத்துகிருஷ்ணன், வழக்கறிஞர் சுஜாதா உள்ளிட்டோர் உடனிருந்தனர். அப்போது வேட்பாளர் கோவிந்தசாமி கூறுகையில் ‘இப்பகுதி மக்கள் பா.ம.க.,விற்கு ஒட்டுமொத்தமாக ஓட்டளித்தனர். இதை பொறுத்துக்கொள்ள முடியாத சிலர் பொதுமக்களை தாக்கி உள்ளனர். இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் வெளியில் செல்ல முடியாத நிலை உள்ளது. அப்பகுதி மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க மாவட்ட நிர்வாகம், நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் பா.ம.க., தலைவர் மணி தலைமையில் கடலுாரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்’ என்றார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...