கோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டும் - ஜவாஹிருல்லா கோரிக்கை!

மே 21, 2019 347

சென்னை (21 மே 2019): ரம்ஜான் மற்றும் கோடை வெயிலை கருத்தில் கொண்டு கோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்று மமக தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 3 அன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும் சூழலில் ஜூன் முதல் வாரத்திலும் இதேபோன்று கோடை வானிலை நீடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், பல்வேறு கோடை கால நோய்கள் சிறுவர் சிறுமிகளுக்கு பரவி வருகின்றன. இரவு நேரங்களில் சில இடங்களில் அனல் காற்று வீசி வருகிறது. இந்த வெப்பத்தால் பெரியவர்களை விட சிறுவர்களே பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

அதேபோல் முஸ்லிம்களின் முக்கிய பண்டிகையான ஈகைத் திருநாள் (ரம்ஜான்) பண்டிகை ஜூன் 5ஆம் நாள் கொண்டாட உள்ள நிலையில் பல மாணவ மாணவியர்கள் குடும்பத்துடன் விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்குச் சென்று அங்கேயே ஈகைத் திருநாளைக் கொண்டாடி ஊர் திரும்பும் சூழல் உள்ளது.

எனவே, கோடை கால பிரச்சனைகள் மற்றும் ரம்ஜான் பண்டிகைக் கொண்டாட்டத்தைக் கருத்தில் கொண்டு விடுமுறையை ஜூன் 10வரை நீட்டித்து உத்தரவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில கோருகிறேன்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...