பெண் வாடிக்கையாளருக்கு உதவிய ஆட்டோ ஓட்டுநர் அப்துல்லா அடித்துக் கொலை!

மே 23, 2019 983

திருச்சி (23 மே 2019): திருச்சியில் அப்துல்லா என்ற ஆட்டோ ஓட்டுநர் நான்கு பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொலை செய்யப் பட்டுள்ளார்.

திருச்சி ஸ்ரீரங்கம் அருகே உள்ள பிச்சாண்டவர் கோவிலை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அப்துல்லா (32). இவர் இரு தினங்களுக்கு முன்பு இரவு 11 மணி அளவில் ஒரு பெண்ணை திருமண மண்டபம் ஒன்றிலிருந்து ஆட்டோவில் ஏற்றி வந்தார். அந்த பெண் திருச்சியில் உள்ள பிரபல பிரியாணி கடையில் 30 பொட்டலம் பிரியாணி வாங்க டோக்கன் வாங்கியுள்ளார். ஆனால் மண்டபத்திற்கு சென்று பார்த்துபோது 28 பொட்டலங்களே இருந்துள்ளது. இதனால் மீண்டும் பிரியாணி கடைக்கு சென்று அந்த பெண் பிரியாணி கடை மேனேஜரிடம் கேட்டுள்ளார்.

அப்போது கடையில் இருந்தவர்களுக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உடனே வெளியில் அந்த பெண்ணுக்காக ஆட்டோவில் காத்திருந்த ஆட்டோ டிரைவர் அப்துல்லா அந்த பெண்ணுக்கு ஆதரவாக கடை காரரிடம் பேசியுள்ளார். இதை கடையில் சாப்பிட்டுக்கொண்டிருந்த அம்பேத்கார் நகரைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் கடைக்காரர்களுக்கு ஆதரவாக பேசியஅப்துல்லாவிடம் தகராறு செய்துள்ளார்.

ஆனால் பிரச்சனை பெரிதாவதை உணர்ந்த அந்த பெண் அங்கிருந்து நகர்ந்து விட்டார். ஆனால் அப்துல்லாவுக்கும் அங்கிருந்த கும்பலுக்கும் இடையே தகராறு முற்றியுள்ளது. அப்போது தனது நண்பர்கள் தயாளன் என்ற ஸ்ரீராம், முன்னா, கோகுல்நாத் என்ற பாரதி ஆகியோரை அழைத்து வந்த நாகராஜ் அப்துல்லாவை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்.

இதில் அப்துல்லா மயங்கி விழுந்தார். உடனே 4 பேரும் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிவிட்டனர். அடிபட்டு கிடந்த அப்துல்லாவை அவரது நண்பர் முஸ்தபா அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். ஆனால் 4 பேரும் நெஞ்சில் மிதித்ததால் மோசமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அப்துல்லா பரிதாபமாக இறந்துவிட்டார்.

இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பிரியாணி கடையில் இருந்த கண்காணிப்பு கேமிராவை பார்த்தபோது அதில் நாகராஜூம் அவரது நண்பர்களும் அப்துல்லாவை அடித்து உதைக்கும் காட்சி பதிவாகி இருந்தது. அதன்படி நாகராஜை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது நண்பர்களான தயாளன், முன்னா, பாரதி ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

ஒரு பெண்ணுக்கு உதவ நினைத்து கடைசியில் அப்பாவி ஆட்டோ டிரைவர் உயிரை இழக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. கொலை செய்யப்பட்ட அப்துல்லாவிற்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...