திமுகவுக்கு அடுத்த நிலையில் நாங்கதான் - மக்கள் நீதி மய்யம்!

மே 24, 2019 392

சென்னை (24 மே 2019): திமுகவுக்கு அடுத்த நிலையில் நாங்கள் தான் இருக்கிறோம் என்று பெருமையாக கூறுகிறார் மக்கள் நீதி மய்யம் மகேந்திரன்.

நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற்றிருக்கிறது. அதுவும் கட்சி தொடங்கிய 18 மாதங்களிலேயே கூட்டணி இல்லாமல் முதல் தேர்தலை சந்தித்திருக்கிறது மய்யம்.

மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களில் நால்வர் தனித்தனியே ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்கிறார்கள். அதுவும் 13 இடங்களில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்கள். மக்கள் நீதி மய்யத்தின் கோவை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் டாக்டர். மகேந்திரன், 1,44,829 வாக்குகள் பெற்று, கொங்கு மண்டலத்தில் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "திராவிடக்கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் எங்களை ஏற்றுக்கொண்டார்கள் என்பதை பெற்ற வாக்குகள் மூலமாகத் தெரிந்துகொண்டோம். மத்தியில் யார் வரவேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, தி.மு.க-வுக்கு மக்கள் வாய்ப்பளித்திருக்கிறார்கள் என்பதாகவே இந்த முடிவுகளைப் பார்க்கிறோம். எங்கள் வளர்ச்சியை யாரும் எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள், ஆனால் எங்களுக்கு இந்த வளர்ச்சி முன்னரே தெரிந்திருந்தது. அது களத்திலேயே உறுதிசெய்யப்பட்டது. நகரம் கிராமம் என்று பிரிக்கவில்லை. குறித்த காலத்துக்குள் எங்கள் சின்னத்தைக் கொண்டு சென்றிருக்கிறோம். இனிவரும் சட்டமன்றத் தேர்தலில் இன்னும் சிறப்பாகச் செயல்படுவோம்'' என்றார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...