குடும்ப விசயம் ரோட்டுக்கு வந்துவிட்டது - தமிழிசை ஆதங்கம்!

ஜூன் 10, 2019 447

சென்னை (10 ஜூன் 2019): சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் மகன் பாஜகவுக்கு எதிராக கோஷம் இட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு இச்சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள தமிழிசை சவுந்திரராஜன், "ஒரு குடும்ப நிகழ்வுக்காக நான், என் கணவர் மற்றும் மகன் மூவரும் கலந்துகொள்ள கிளம்பினோம். சென்னை வந்திருந்த உத்தரப் பிரதேச துணை முதல்வர் தினேஷ் சர்மா, அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் தகவல்தான் எங்களுக்கு முன்கூட்டியே கிடைத்தது. அவரின் சென்னைப் பயணத்தில் திடீரென மாறுதல் ஏற்பட்டது. அவர் எங்கள் கட்சித் தலைமை அலுவலகமான கமலாலயம் வந்து, தொண்டர்களைச் சந்திப்பதாகத் திடீரென திட்டமிடப்பட்டது. அந்தத் தகவல் எனக்குக் கிடைத்ததும், `நீங்கள் முன்னால் செல்லுங்கள். துணை முதல்வர் கலந்துகொள்ளும் கட்சிப் பணியை முடித்துவிட்டு அடுத்த விமானத்தில் நான் வருகிறேன்' என என் கணவர் மற்றும் மகனிடம் சொன்னேன். இந்த நிகழ்வெல்லாம் சென்னை விமான நிலையத்தில் நடந்தது. நாங்கள் மூவரும் பயணிக்கவிருந்த விமானம் புறப்படத் தயாரானது.

`போர்டிங் ஸ்டார்ட் ஆகிடுச்சு. உன் கட்சிப் பணிதான் முக்கியமா... குடும்ப நிகழ்வுக்காக எங்களுடன் வரமாட்டியா... உனக்குக் குடும்பம் முக்கியமில்லையா...' என என் மகன் சுகநாதன் அழைத்துக்கொண்டே இருந்தான். பெரிதாக அவன் கோஷமெல்லாம் போடவில்லை. அது குடும்ப ரீதியான, பர்சனலான விஷயம். இந்த எமோஷனல் எல்லோருக்குமே இருப்பது இயல்புதானே! இப்படி எல்லோரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சில நிகழ்வுகள் நடக்கும். இதை அரசியலாக்குவது நியாயமில்லை" என விளக்கமளித்தார் தமிழிசை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...