இதை உபயோகித்தால் இன்று முதல் அபராதம்!

ஜூன் 17, 2019 450

சென்னை (17 ஜூன் 2019): திங்கள் முதல் சென்னை கோயம்பேட்டில் தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டால் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கோயம்பேட்டில் சுமார் ஒன்றரை டன் அளவுக்கு தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் வரும் திங்கட்கிழமை முதல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்தாலோ அல்லது அதனை வாங்கி விற்றாலோ உற்பத்தி செய்தாலோ கடுமையான அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இந்தாண்டு ஜனவரி 1-ஆம் தேதி தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை உத்தரவு அமலுக்கு வந்தது. தொடக்கத்தில் ஹோட்டல்களில் சாம்பார் கட்டிக் கொடுப்பது முதல் பொருட்களை வாங்கும் பிளாஸ்டிக் கவர் வரை அனைத்துமே விற்கப்படாமல் தான் இருந்தது. இதனால் பல சிறிய கடைகள் பார்சல் கட்டி கொடுக்காமலேயே இருந்தன. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல தற்போது அரசு தடை விதித்த ப்ளாஸ்டில் பொருட்கள் மீண்டும் விற்பனைக்கும் பயன்பாட்டிற்கும் வந்துவிட்டது.

சென்னையில் ப்ளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க உருவான கண்காணிப்புக் குழுக்கள் அவ்வப்போது ஆங்காங்கே சோதனை நடத்தியதில் பல டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் சமீபகாலமாக அந்த ப்ளாஸ்டிக் பைகள் பொருட்களின் விற்பனை அதிகரித்திருக்கிறது. குறிப்பாக வடநாட்டிலிருந்து எடுத்து வரப்பட்டு சென்னையில் விற்பனை செய்வதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதனால் சென்னை மாநகராட்சி ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் படி வரும் திங்கட்கிழமை முதல் தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்களை தயாரித்தால் முதல் தடவை ரூபாய் 1 லட்சம், மீண்டும் செய்தால் ரூபாய் 2 லட்சம் மூன்றாவது தடவையும் செய்தால் ரூபாய் 3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் . மீண்டும் அந்த நிறுவனம் தயாரித்தால் அந்த நிறுவனத்துக்கு சீல் வைக்கப்படும்.

அதேபோல தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கையிருப்பு வைத்திருந்தாலோ அல்லது வாகனங்களில் எடுத்துச் சென்றாலோ முதல் தடவை ரூபாய் 25 ஆயிரம் அடுத்து 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. மீண்டும் அவ்வாரு செய்தால் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. நடுத்தர வணிக நிறுவனங்கள் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்றால் ஆயிரம் முதல் 5000 வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

சிறு குறு நிறுவனங்கள் விற்றால் 100 முதல் 500 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இதன்பிறகும் இந்த நிறுவனங்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்றால் அந்த நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும். இந்த அபராதங்களை விதிப்பதற்கு வார்டுகள் வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே இந்த அபராதம் நடைமுறையில் இருந்தாலும் தற்போது கோயம்போடில் சுமார் ஒன்றரை டன் அளவிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டத்தைத் தொடர்ந்து, இந்த அபராதம் வசூலிப்பு முறை திங்ககிழமை அமலுக்கு வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...