தமிழுக்கும் பாரத் மாதாவுக்கும் போட்டி - காரசாரமான மக்களவை பதவியேற்பு!

ஜூன் 18, 2019 532

புதுடெல்லி (18 ஜூன் 2019): மக்களவை எம்பிக்கள் பதவியேற்பு நடைபெற்றபோது தமிழக எம்.பிக்கள் வாழ்க தமிழ் என்றவாறு பதவியேற்றுக் கொண்டனர்.

17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று கூடியது. நேற்று முதல் மக்களவை உறுப்பினர்கள் பதவியேற்றுவருகின்றனர். மக்களவைத் தேர்தலில் தமிழகத்திலிருந்து தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்று பதவியேற்றுக்கொண்டனர். உறுப்பினர்களுக்கு மக்களவை தற்காலிக சபாநாயகர் வீரேந்திரக் குமார் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தமிழிலேயே பதவியேற்றுக் கொண்டனர். மத்திய சென்னை தி.மு.க எம்.பி. தயாநிதி மாறன் `தமிழ் வாழ்க’ என்று கூறி பதவியேற்றுக்கொண்டார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார், வாழ்க தமிழ், வாழ்க அம்பேத்கர் என்ற முழக்கத்துடன் பதவியேற்றுக்கொண்டார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், ``வாழ்க அம்பேத்கர், பெரியாரியம்.. வளர்க ஜனநாயக சமத்துவம்” என்றார்.

பதவியேற்பு விழாவுக்கு கறுப்புச் சட்டை அணிந்து வந்த செந்தில் குமார் எம்.பி, `வாழ்க திராவிடம்’ என்று சொல்லி பதவியேற்றார். பெரம்பலூர் தொகுதி எம்.பி, டி.ஆர்.பாரிவேந்தர், `தமிழ் வாழ்க.. இந்தியாவும் வாழ்க’ என்றார்.

சேலம் தொகுதி எம்.பி பார்த்திபன், ``வாழ்க தமிழ் என்பதுடன் வாழ்க தளபதி'' என்றும் சொல்லி பதவியேற்றுகொண்டார்.
மதுரை மக்களவைத் தொகுதி எம்.பி, சு.வெங்கடேசன், ``வாழ்க தமிழ்... வாழ்க மார்க்சியம்” என்ற கோஷத்துடன் பதவியேற்றுக்கொண்டார். தூத்துக்குடி தொகுதி எம்.பி கனிமொழி, ``வாழ்க தமிழ், வாழ்க பெரியார்” என்று சொல்லி பதவியேற்றுக்கொண்டார்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார், ``ஜெய் ஜவான்... ஜெய் கிசான்... வாழ்க ராஜீவ் காந்தி” என்றார்.

பெரம்பலூர் தொகுதி எம்பியாக பாரிவேந்தர் பதவியேற்க வந்தார். அப்போது பாரிவேந்தர் தமிழ் வாழ்க இந்தியாவும் வாழ்க என கூறினார்

ஒரே அ.தி.மு.க எம்.பி-யான ரவீந்திரநாத் குமார், ``வாழ்க தமிழ், வாழ்க எம்.ஜி.ஆர், வாழ்க புரட்சித் தலைவி அம்மா.. வந்தே மாதரம்.. ஜெய்ஹிந்த்” என்று சொல்லி பதவியேற்றுக்கொண்டார். ரவீந்திரநாத் பதவியேற்க வரும்போது பா.ஜ.க எம்.பி-க்கள் கைதட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழ் வாழ்க என்று கூறுபோதெல்லாம் பாஜகவினர் பாரத் மாதாகீ ஜே, ஜெஹ் ஶ்ரீராம் என்று கோஷமிட்டனர். மக்களவையின் ஆரம்பமே அமர்க்களமாக தொடங்கியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...