சிலை கடத்தல் மற்றும் தங்கத்தில் முறைகேடு வழக்கில் முன்னாள் குருக்கள் கைது!

ஜூன் 24, 2019 362

மும்பை (24 ஜூன் 2019): காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு சிலை செய்ததில் 2 கோடியே 82 லட்சம் ரூபாய் முறைகேடு புகாரில், முன்னாள் குருக்கள் மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் ஏகாம்பரரேஸ்வரர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்ட சோமஸ்கந்தர், ஏலவார்குழலி சிலைகளுக்கு, தங்கம் தானமாக பெறப்பட்டதில் முறைகேடு நடந்ததாக கடந்த 2017-ஆம் ஆண்டு குற்றச்சாட்டு எழுந்தது.

2 சிலைகளிலும் சேர்க்கப்பட வேண்டிய 2 கோடியே 82 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 8.7 கிலோ தங்கம் கையாடல் செய்யப்பட்டதாக சிலைதடுப்பு காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில் முன்னாள் அறநிலையத்துறை ஆணையர் வீரசண்முகமணி, கூடுதல் ஆணையர் கவிதா ஆகியோர் கைதாகி நீதிமன்ற பிணையில் உள்ளனர்.

சிலை செய்த முத்தையா ஸ்தபதிக்கு உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. வழக்கில் தொடர்புடைய முன்னாள் குருக்கள் ராஜப்பா முன் அனுமதி பெறாமல் கனடா தப்பிச் சென்றார்.

20 நாட்களுக்குப் பிறகு இந்தியா திரும்பிய அவர், மும்பை விமான நிலையத்தில் குடியேற்ற அதிகாரிகள் உதவியுடன் சிலை கடத்தல் தடுப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

78 வயதாகும் ராஜப்பா சிறு வயது முதலே ஏகாம்பரரேஸ்வரர் கோவில் வளாகத்தில் வசித்துவந்துள்ளார். மற்ற அர்ச்சகர்களை விட மூத்தவர் என்பதால் கோவிலில் இவருக்கு அனைத்து மரியாதைகளும் அளிக்கப்பட்டுள்ளன. . அதே போல கோவில் நிர்வாக விவகாரங்களிலும், சாமி சிலை வடிவமைப்பிலும் ராஜப்பாவின் தலையீடு அதிகளவில் இருந்துள்ளது.

1600 ஆண்டு தொன்மையான சோமஸ்கந்தர் சிலையை சேதமடைந்ததாக கூறி வெளிநாடு கடத்த வேண்டுமென்ற உள்நோக்கத்தில், 27 ஆண்டுகளாக இந்த கோவிலில் குற்றங்கள் நடந்துவந்ததாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கோயிலில் 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மற்றொரு சோமஸ்கந்தர் சிலை வெளி நாட்டிற்கு கடத்தப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முறைகேடுகள் வெளிவரத் தொடங்கியதால் கோடீஸ்வரர் ஒருவர் ராஜப்பாவை வெளிநாடு செல்லுமாறு கூறியதாக புலனாய்வு குழுவிற்கு தகவல் கிடைத்துள்ளது. ராஜப்பா ஏன் வெளிநாடு சென்றார், 20 நாட்களில் ஏன் திரும்பி வந்தார் என விசாரித்தால் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகம் அழைத்து வரப்பட்ட ராஜப்பா கும்பகோணம் குற்றவியல் நீதிபதி மாதவ ராமானுஜன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு ஜூலை 5 வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டதை அடுத்து, திருச்சி மத்திய சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...