கேள்விக்குறியாகும் சிறுபான்மையினர் மீதான பாதுகாப்பு - பாப்புலர் ஃப்ரெண்ட் அறிக்கை!

ஜூன் 25, 2019 406

புதுடெல்லி (25 ஜூன் 2019): தொடரும் இந்துத்வாவின் படுகொலைகள் கவலை அளிக்கிறது என்று பாப்புலர் ஃப்ரெண்ட் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாப்புலர் ஃப்ரெண்ட் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

பா.ஜ.க அரசாங்கம் இரண்டாவது முறையாக பதவிக்கு வந்ததிலிருந்து பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வரும் முஸ்லிம் விரோத வன்முறை குறித்த தனது ஆழ்ந்த கவலையை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் E.அபுபக்கர் வெளிப்படுத்தியுள்ளார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் சிறுபான்மை மக்களிடமிருந்து பயத்தை நீக்கி அவர்களின் நம்பிக்கையை வென்றெடுப்பது குறித்து பிரதமர் உறுதி மொழிகள் கொடுத்த பின்னரும் நாட்டில் இந்துத்துவா குண்டர்களின் கும்பல் படுகொலைகள் அபாயகரமான விதத்தில் அதிகரித்துள்ளன. பாஜகவின் வெற்றிக்கு பின்னர் பல்வேறு மாநிலங்களில் முஸ்லிம் பயணிகள் மற்றும் தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் படுகொலைகள் குறித்து தொடர்ந்து செய்திகள் வருகின்றன. முஸ்லிம்கள் தூக்கிச் செல்லப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு, தாக்கப்படுகின்றனர்.

இந்தியாவில் சிறுபான்மையினர் மீதான தொடர் வன்முறைகளை உறுதிப்படுத்தும் அமெரிக்க உள்துறையின் 2018 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திர அறிக்கையை இந்தியாவின் வெளியுறவு துறை அமைச்சகம் மறுத்த அதே தினத்தில் ஜார்க்கண்டில் மத வெறியர்களின் கடுமையான தாக்குதல்கள் மற்றும் சித்திரவதை காரணமாக 24 வயது முஸ்லிம் இளைஞர் தப்ரீஸ் அன்சாரி மரணித்தது நேர் முரணானது. இத்தகைய வன்முறையை வெறும் கும்பல் படுகொலை என்று அழைப்பது தவறான செய்தியை கொடுக்கும். இதில் ஈடுபட்டவர்கள் சங்பரிவாரை சார்ந்தவர்கள் அல்லது குறைந்த பட்சம் முஸ்லிம் விரோத கொள்கையால் ஈர்க்கப்பட்ட கும்பல்கள் ஆவர். இத்தகைய தாக்குதல்களை நடத்தும் முறையாக கட்டமைக்கப்பட்ட, ஆயுதம் தாங்கிய இந்துத்துவா குண்டர்கள் அதிகாரத்தில் உள்ளவர்களால் தண்டனையிலிருந்து பாதுகாப்பு பெறுகின்றனர். ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் இடுமாறு பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளிகள் நிர்பந்திக்கின்றனர். அவர்களின் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்ட பின்னரும் தப்ரீஸ் அன்சாரி தொடர்ந்து சித்திரவதை செய்யப்பட்டார். சிறு விபத்துகளுக்கு கூட உடனடியாக கருத்துக்களை பதிவு செய்யும் அரசாங்கம் முஸ்லிம்கள் மீதான இந்துத்துவாவின் தாக்குதலின் போது அமைதியாக இருக்கிறது. ராஜஸ்தானின் பார்மர் என்ற இடத்தில் ராம் கதா நிகழ்வில் பந்தல் சரிந்ததற்கு உடனடியாக வருத்தம் தெரிவித்த மோடி, முஸ்லிம்கள் மீதான தொடர் கும்பல் தாக்குதல்களுக்கு தொடர்ந்து மௌனம் காக்கிறார். மறுபுறம் முஸ்லிம்களின் பாதுகாப்பு குறித்து பேசுவதற்கு தயங்கும் எதிர்க்கட்சிகள் தங்களின் மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு துரோகம் இழைக்கின்றனர்.

அனைத்து குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் மீது அரசியல் சாசனம் விதித்த கடமையாகும். அதில் தவறும் பட்சத்தில் ஒட்டுமொத்த தேசமும் குழப்பத்திற்குள் தள்ளப்படும் என்று E.அபுபக்கர் எச்சரித்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...