பள்ளி பால்கனி இடிந்து விழுந்து மாணவர்கள் படுகாயம்!

ஜூன் 26, 2019 272

மதுரை (26 ஜூன் 2019): மதுரையில் பள்ளி பால்கனி இடிந்து விழுந்ததில் மூன்று மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெற்கு கோபுரம் அருகே இயங்கி வரும் அரசு உதவி பெறும் ஆயிர வைசிய மேல் நிலைப்பள்ளியில், சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் பள்ளி திறக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் வரத்துவங்கினர்.

அப்போது திடீரென பள்ளிக் கட்டடத்தின் முதல் மாடியிலிருந்த, பால்கனியின் கைப்பிடி சுவர் இடிந்து விழுந்தது. அதில் 11 ஆம் வகுப்பு மாணவர் வீரகுமார், 12 ஆம் வகுப்பு மாணவர்கள் குமாரவேல், சக்திவேல் ஆகிய 3 பேர் பலத்த காயமடைந்தனர்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மாணவர்களை மீட்ட ஆசிரியர்கள், சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பள்ளிக்கு விடுமுறை அளித்து மற்ற மாணவர்களையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் விபத்து நிகழ்ந்த இடத்தை காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை உயரதிகாரிகள் பார்வையிட்டனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...