தீவிர சிகிச்சைப் பிரிவில் சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால்!

ஜூலை 10, 2019 488

சென்னை (10 ஜுலை 2019): சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

சரவணபவன் ஓட்டலில் வேலை செய்து வந்தவரின் மகளான ஜீவஜோதியை மூன்றாம் தாரமாக திருமணம் செய்ய எண்ணினார் அந்த ஹோட்டலின் உரிமையாளர் ராஜகோபால். ஜீவஜோதி, பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சாந்தகுமார் கொடைக்கானலில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

இந்த கொலையின் பின்னணியில் இருந்தது சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால்தான் என்பது உறுதியானது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார். ஆனால் உச்ச நீதிமன்றம் அந்த தண்டனையை ஆயுள் தண்டனையாக உயர்த்தி அறிவித்தது.

மேலும் அவரை ஜூலை 7ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சரணடையக் கோரி உத்தரவு பிறப்பித்தனர். ஆனால் தனக்கு உடல்நிலை சரி இல்லை என்ற காரணத்தை கூறி சிறை தண்டனையில் இருந்து விலக்கு கேட்டார். ஆனால் அதற்கு உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று மாலை ஸ்ட்ரச்சர் மூலம் அழைத்துவரப்பட்ட அவர் சென்னை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

பின்பு அவரை புழல் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நேற்று சிறையில் அடைக்கப்பட்ட சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் தற்போது சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில், சிறைக்கைதிகளுக்கான தனிப்பிரிவில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...