திமுக மேயர் உமா மகேஸ்வரியின் கொலை வழக்கில் பதற வைக்கும் திருப்பங்கள்!

ஜூலை 30, 2019 431

திருநெல்வேலி (30 ஜூலை 2019): நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் அடுத்தடுத்து பதற வைக்கும் வகையில் பல திருப்பங்கள் அரங்கேறியுள்ளன.

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன் மற்றும் பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் தி.மு.க. பிரமுகரான சீனியம்மாள் என்பவரது மகன் கார்த்திகேயன் (வயது39) கைது செய்யப்பட்டார்.

அவரிடம் பாளை குற்றப்பிரிவு போலீசார் மற்றும் தனிப்படை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர், ‘தனது தாயார் சீனியம்மாளின் அரசியல் வாழ்க்கையை சீர்குலைத்ததால் உமா மகேஸ்வரியையும், அவரது குடும்பத்தையும் கொலை செய்தேன்’ என்று கூறினார்.

மேலும் 3 பேரையும் தன்னந்தனியாக, தான் மட்டுமே கொலை செய்ததாகவும் கைதான கார்த்திகேயன் போலீசாரிடம் கூறியுள்ளார். ஆனால் 3 பேர் கொலையில் வேறு யாருக்கும் சம்பந்தம் இருக்கலாம் என்றும், கூலிப்படையினர் தொடர்பு உள்ளதா? என்றும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். ஆனால் கைதான கார்த்திகேயன் வேறு எந்த தகவலையும் சொல்ல மறுத்து விட்டார்.

கொலை செய்யப்பட்ட உமா மகேஸ்வரியின் வீட்டிலிருந்து சுமார் 25 பவுன் நகைகள் வரை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதனால் தனிப்படை போலீசார் அந்த நகைகளை மீட்க கார்த்திகேயனிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது முதலில் அவர் நகைகளை தாமிரபரணி ஆற்றில் வீசியதாக கூறினார். பின்னர் செங்குளம் பகுதியில் நகைகள் மற்றும் கத்தியை வீசி விட்டதாக கூறினார்.

இதனால் தனிப்படை போலீசார் அந்த பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். ஆனால் அங்கு நகைகளை வீசியதற்கான தடயங்கள் எதுவும் இல்லை. மேலும் நகைகளும் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து கைதான கார்த்திகேயனை அழைத்து கொண்டு பாளையங்கோட்டை சாந்தி நகரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

மேலும் தனிப்படை போலீசார், வீட்டில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரு மறைவிடத்தில் உள்ள பையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மற்றும் கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தி ஆகியவை இருந்தது. அதனை போலீசார் மீட்டனர்.

அதில் 6 ஜோடி தங்க வளையல்கள், ஒரு தங்க காப்பு, ஒரு ஜோடி கம்மல் மற்றும் இரண்டு தங்க சங்கிலிகள் ஆகியவை இருந்தது. அந்த நகைகள் அனைத்தும் உமா மகேஸ்வரி வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டது என்று உறுதி செய்யப்பட்டது. மொத்தம் 25 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து பாளை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் கைதான கார்த்திகேயனை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கும், பறிமுதல் செய்யப்பட்ட நகைகள், கார் மற்றும் கத்தி ஆகியவைகளை கோர்ட்டில் ஒப்படைப்பதற்கும் தேவையான வேலைகளில் இறங்கியுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...