தொடரும் நீட் தேர்வு தற்கொலை - நீட் தேர்வு பசிக்கு இன்னொரு மாணவி இரை!

ஆகஸ்ட் 01, 2019 380

பெரம்பலூர் (01 ஆக 2019): இரண்டு முறை நீட் தேர்வு எழுதியும் மருத்துவ சீட் கிடைக்காத விரக்தியில் கீர்த்தனா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பெரம்பலூரில் அரசுப் பேருந்தில் நடத்துனராக பணியாற்றி ஓய்வுபெற்ற செல்வராஜ்ஜின் மகளான கீர்த்தனா, கடந்த ஆண்டு நடைபெற்ற பிளஸ் டூ தேர்வில் 1053 மதிப்பெண்களை எடுத்தார்.

கடந்தாண்டு நீட் தேர்வில் 202 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்ததால் அவர் மருத்துவப் படிப்பிற்கு செல்ல இயலவில்லை.

இதனையடுத்து, சென்னையில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில், இந்தாண்டு முழுவதும் நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்ற அவர், 2019-ம் ஆண்டு நீட் தேர்வில் 384 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்தார். அதனால், இந்தாண்டும் அவருக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை.

அதேவேளை அவரது தோழி ஒருவர் குறைவான மதிப்பெண் பெற்றபோதும் சீட் கிடைத்துள்ளது.

இதனால் கடும் மனவிரக்தியில் இருந்த கீர்த்தனா, வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, தனது அறையில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஆனால் இதனை போலீசாருக்கு தெரிவிக்காமல் அடக்கம் செய்ய அவரது உறவினர் முயன்றுள்ளனர்.

ஆனால் தகவல் அறிந்த போலீசார் கீர்த்தனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...