நெல்லையில் சோகம் - நீட் தேர்வில் தோல்வி அடைந்த ஆட்டோ ஓட்டுநர் மகள் தற்கொலை!

ஆகஸ்ட் 04, 2019 272

நெல்லை (04 ஆக 2019): நெல்லையில் நீட் தேர்வில் தோல்வி அடைந்தத ஆட்டோ ஓட்டுநர் மகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நெல்லை தச்சநல்லூர் அருகே உள்ள ஊருடையார்புரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது48), ஆட்டோ டிரைவர். இவரது மகள் தனலட்சுமி (18). இவர் பிளஸ்-2 படித்து விட்டு, மருத்துவம் படிக்க ‘நீட் தேர்வு’ எழுதியிருந்தார். இந்த நிலையில் ‘நீட்’ தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்து விட்டார்.

அதுமுதல் வேறு எந்த மேல்படிப்புக்கும் செல்லாமல் இருந்த தனலட்சுமி நேற்று பிற்பகல் வீட்டில் யாரும் இல்லாத போது மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வெளியே சென்று விட்டு திரும்பிய அவரது தாயாரும், உறவினர்களும் மாணவி தனலட்சுமி தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து கதறி துடித்து அழுதனர்.

சம்பவ இடத்துக்கு தச்சநல்லூர் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது மாணவி தனலட்சுமி உருக்கமாக ஒரு கடிதம் எழுதி வைத்து இருந்தார்.

‘நீட்’ தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்து, மருத்துவ படிப்புக்கு செல்ல முடியாமல் போனது மிகவும் வருத்தமளிக்கிறது. நான் வெற்றி பெற்று டாக்டராகி இருந்தால் எனது மதிப்பு வேறு மாதிரி ஆகி இருக்கும். இப்போது வீட்டில் அடைப்பட்டு கிடக்கிறேன். என் தற்கொலைக்கு வேறு யாரும் காரணம் அல்ல. வாழ பிடிக்காததால் தற்கொலை செய்து கொள்கிறேன்.

இதன் மூலம் நீட் தேர்வு தற்கொலை தமிழகத்தில் 7 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...