கடலூரில் உயர் ஜாதியினர் நடத்திய அட்டூழியம்!

ஆகஸ்ட் 07, 2019 390

கடலூர் (07 ஆக 2019): கடலூரில் உயர் ஜாதியினர் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் கண்ணாடி அணியக்கூடாது என்று தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், எம்.படிக்குடிக்காட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் அழகேசன். இவர் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர். கடந்த வாரம் சனிக் கிழமையன்று உயர் சாதியினர் சிலர், தங்கள் தெருவிற்குள் வரும் போது கண்ணாடி அணியக்கூடாது என்றும் இருசக்கர வாகனத்தை தள்ளிக் கொண்டுதான் செல்லவேண்டும் எனவும் சாதி பெயரை சொல்லி கொடுமைப் படுத்தியுள்ளனர். அப்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அழகேசனை அவர்கள் தாக்கியுள்ளனர். அழகேசனின் தாயார், அன்னக்கிளி இதை தட்டிக்கேட்டுள்ளார்.

அதனைப் பெறுத்துக்கொள்ள முடியாத உயர் சாதியினர் அழகேசனின் தாயரையும் அடித்துள்ளனர். இந்த தாக்குதலில் அன்னக்கிளி காயம் அடைந்தார். இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து தன்னையும், தன் தாயாரையும் சத்யராஜ், பழனிச்சாமி, கோபி, வெங்கடேசன் ஆகிய 4 பேரும் தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் அழகேசன். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், நடவடிக்கை எடுக்க பெரிய அளவில் எந்த ஆர்வமும் காட்டவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அழகேசனின் ஊர் மக்கள் 200க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த கடலூர் ஆட்சியர் அன்புச்செல்வன், பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையை கேட்டறிந்தார்.

பின் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடுவதாக உறுதி அளித்தார். ஆட்சியரின் உத்தரவின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு சத்யராஜ், பழனிச்சாமி, வெங்கடேசன் ஆகியோரைக் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருக்கும் கோபியை போலீசார் தேடிவருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...