கிடப்பில் போடப்பட்ட குளம் வெட்டும் பணியை முடித்து வைத்த சமூக அமைப்புகள்!

ஆகஸ்ட் 22, 2019 501

திருவாரூர் (22 ஆக 2019): நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்ட குளம் வெட்டும் பணியினை சமூக அமைப்புகள் இணைந்து செயல்படுத்திக் காட்டியுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் கானூர் ஊராட்சியில் உள்ள சமுதாயக்கூடம் எதிரில் வெட்டப்பட்ட குளம், வேலை நிறைவு பெறாமல் பல ஆண்டுகளாக இருந்து வந்தது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற நீடாமங்கலம் கிரீன் நீடா சுற்றுச்சூழல் அறக்கட்டளையும், சவுதி அரேபியா ஜெத்தா தமிழ்ச்சங்கமும் இணைந்து கிடப்பில் கிடந்த குளம் வெட்டும் பணியை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் இயந்திர உதவியுடன் நான்கு கரைகளையும் குளமட்டத்திலிருந்து ஏழு அடி வரை உயர்த்தி கட்டினர்.

சமுதாயக் கூடம் மற்றும் குளத்தைச் சுற்றி மண்டிக்கிடந்த காட்டாமணி செடிகள் மற்றும் காட்டுக்கருவேலமரங்கள் வோரோடு பிடுங்கி எறிந்து தீ வைத்து எரிக்கப்பட்டது. குளத்தில் இருந்து மண் எடுத்து சமுதாயக் கூடம் மற்றும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியை சுற்றிலும் இருந்த பெரும்பள்ளங்கள் சமப்படுத்ப்பட்டது. குளம் தூர்வாரும் தொடக்க விழாவிற்கு கிரீன் நீடா சுற்றுச்சூழல் அறக்கட்டளை நிறுவனர் மு.ராஜவேலு தலைமை வகித்தார். கிராம முக்கியஸ்தர்கள் ராஜேந்திரன், நவநீதம், தனிக்கோடி, நாகராஜன் முன்னிலை வகித்தனர்.

கிரீன் நீடா சுற்றுச்சூழல் அறக்கட்டளை நீடாமங்கலம் நகர அமைப்பாளர் கே.ஆர்.கே.ஜானகிராமன் வரவேற்றார். குளம் தூர்வாரும் சேவையை ஜெத்தா தமிழ்ச்சங்க செயற்குழு உறுப்பினர்கள் சிராஜுதீன், அப்துல் அஜீஸ், ராஃபியா, விஜயன், ரமணா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

விழாவில் பசுமை கரங்கள் தலைவர் ஆர்.கைலாசம், மன்னார்குடி இராஜகோபாலசாமி அரசு கலைக் கல்லூரி உதவி பேராசிரியர் முனைவர் பிரபாகரன், பத்திரிகையாளர் கோபாலகிருஷ்ணன், பாரம்பரிய நெல் ரகங்கள் சேகரிப்பாளர் பசுமை எட்வின், மகிழங்காடு மக்கள் மன்ற தலைவர் ச.மலர்மன்னன், இயற்கை மருத்துவர்கள் வில்லியம் ஸ்டீபன்சன், சண்முக வடிவேலன் ஆகியோர் பேசினர். கிரீன் நீடா சுற்றுச்சூழல் அறக்கட்டளை தகவல் தொழில்நுட்பப் பிரிவு அமைப்பாளர் முகமது ரபீக் நன்றி கூறினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...