ஜாதிப்பிரிவினையை அரசே ஊக்குவிக்கிறதா? - நீதிமன்றம் சரமாரி கேள்வி!

ஆகஸ்ட் 26, 2019 182

சென்னை (26 ஆக 2019): வேலூரில் ஆதிதிராவிடர்களுக்கு தனி மயானம் அமைத்துக் கொடுத்திருப்பது சாதி பிரிவினையை அரசே ஊக்குவிப்பது போல் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த நாராயணபுரத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த குப்பன் என்பவரின் உடலை விளைநிலங்கள் வழியே கொண்டு செல்ல உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக பாலத்தில் இருந்து தொட்டில்கட்டி அவரது சடலம் இறக்கப்பட்டு கரைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பாக பத்திரிகையில் வெளியான செய்தியை சுட்டிக் காட்டி மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரலான கார்த்திகேயன், நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அமர்வின் கவனத்துக்கு கொண்டு சென்றார். இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள், இது தொடர்பாக பதிலளிக்க வேலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது

சம்பவம் நடந்த நாராயணபுரம் கிராமத்தில் இருக்கும் ஆதிதிராவிடர்களுக்கு தனி மயானம் அமைக்கப்பட்டுள்ளதாக வட்டாட்சியர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், தமிழகத்தில் ஆதிதிராவிடர்களுக்கென தனி மருத்துவமனைகளோ, அலுவலகங்களோ, காவல் நிலையங்களோ இல்லாத நிலையில் தனி மயானத்தை அரசே அமைத்து கொடுப்பது சாதி பிரிவினையை ஊக்குவிப்பது போல் உள்ளதாக கருத்து தெரிவித்தனர்.

தெருக்களில் உள்ள சாதி பெயர்களை நீக்க வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளுக்கு ஆதிதிராவிடர் நலப்பள்ளி போன்ற பெயர்களை நீக்காதது ஏன் எனவும் அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், குப்பன் உடலை பாலத்தில் இருந்து கயிறு கட்டி இறக்கிய சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆகஸ்ட் 28 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை தள்ளிவைத்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...