இ.யூ.முஸ்லிம் லீக் புதுச்சேரி மாநில தலைவர் மரணம் - காதிர் மொய்தீன் இரங்கல்!

ஆகஸ்ட் 29, 2019 202

புதுச்சேரி (29 ஆக 2019): இ.யூ.முஸ்லிம் லீக் புதுச்சேரி மாநில தலைவர் ஏ. அஹமது ஜவாஹிர் காலமானார். தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் புதுச்சேரி மாநில தலைவர் ஏ. அஹமது ஜவாஹிர் (வயது 63) இன்று 28-08-2019 புதன்கிழமை காலை 6. 45 மணியளவில் காலமானார். அன்னாரின் ஜனாஸா இன்று 28-08-2019 அஸர் தொழுகைக்கு பிறகு மாலை 5 மணியளவில் புதுச்சேரி சுப்ராயபிள்ளை வீதியில் உள்ள முஹம்மது பூரா ஜும்ஆ மஸ்ஜிதில் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு புதுச்சேரி உப்பளம் கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

மறைவு செய்தி அறிந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் புதுச்சேரி மாநில தலைவரான அஹமது ஜவாஹிர் சாகிப் இன்று (28.08.2019) மறைந்துள்ள செய்தி பேரதிர்ச்சியை தந்துள்ளது.

தமிழ்நாடு இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையை பிறப்பிடமாக கொண்ட சகோதரர் அஹமது ஜவாஹிர் சிறு வயதிலேயே புதுச்சேரிக்கு தொழிலுக்காக சென்ற காலம் முதல் இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் தன்னை இணைத்துக்கொண்டு பல்வேறு நிலைகளில் முஸ்லிம் லீக் வளர்ச்சிக்கு துணை நின்றுள்ளார். இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்டு புதுச்சேரி மாநிலத்திலுள்ள காரைக்கால், மாஹே, புதுச்சேரி மாவட்டங்களில் இயக்கப் பணிகளுக்காக வேண்டி அடிக்கடி சுற்றுப்பயணம் செய்து சிறப்புயர் பணியாற்றியவர் சகோதரர் அஹமது ஜவாஹிர்.

புதுச்சேரி மாநில பொதுச்செயலாளராகவும், தற்போது மாநில தலைவராகவும் பொறுப்பேற்று புதுச்சேரி மாநிலத்திற்கும், தேசிய தலைமை நிலையத்திற்கும் பாலமாக இருந்ததோடு, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களுடனும், திமுக தலைவர்களுடனும் நெருங்கிய தொடர்பு ஏற்படுத்தி சமுதாய பிரச்சினைகளை அவ்வப்போது கூட்டணி கட்சி தலைவர்களுக்கு எடுத்து சொல்லி பணிகளையாற்றியவர் சகோதரர் அஹமது ஜவாஹிர்.

இன்று (28.08.2019) கேரள மாநிலம் கள்ளிக்கோட்டை லீக் ஹவுஸில் கண்ணியத்திற்குரிய பானக்காடு ஹைதர் அலி ஷிஹாப் தங்ஙள் தலைமையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய அரசியல் ஆலோசனைக்குழு (பி.ஏ.சி.) கூட்டத்தில் புதுச்சேரி மாநில தலைவர் அஹமது ஜவாஹிர் சாகிப் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவரின் மறுவுலக நல்வாழ்விற்காக துஆ செய்யப் பட்டது.

இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் இரங்கல் செய்தியில் தெரிவித்திருந்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...