ப.சிதம்பரம் மீதான சிபிஐ காவல் மீண்டும் நீட்டிப்பு!

ஆகஸ்ட் 30, 2019 186

புதுடெல்லி (30 ஆக 2019): ப சிதம்பரம் மீதான சிபிஐ காவல் வரும் 2 ஆம் தேதி வரை நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம், கடந்த 2007ம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக இருந்தபோது ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் பெற்றுத் தருவதாக கூறி, கோடிக் கணக்கில் லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது.

இதே குற்றச்சாட்டு, சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் மீதும் உள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக இருவரின் மீதும் சிபிஐ, இதே வழக்கில் சம்பந்தப்பட்ட சட்ட விரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கப் துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், தன்னை சிபிஐ கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு, கடந்த 20ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார்.

இதற்கிடையே, கடந்த 21-ம் தேதி ப.சிதம்பரத்தை அவரது வீட்டின் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் டெல்லியில் தனி நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். 22-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை சிபிஐ விசாரிக்க முதலில் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. பின்னர் மீண்டும் 27-ம் தேதி முதல் 30-ம் தேதி சிபிஐ காவலில் ப.சிதம்பரத்தை விசாரிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது. மொத்தம் 9 நாள் சிபிஐ விசாரணை முடிவுற்று இன்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது மேலும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் நீதிமன்றம் கோரிக்கை விடுத்தது. ஏற்கனவே 5 நாள் காவல் போதும் என்ற நீங்கள் தற்போது மேலும் 5 நாள் விசாரிக்க அனுமதி வேண்டும் என கோருவது ஏன்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு, கூடுதலாக கிடைத்துள்ள ஆவணங்கள், மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் மேலும் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வேண்டும் என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ப.சிதம்பரத்திற்கு 3-வது முறையாக சிபிஐ காவல் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...