மணமேடையில் மணமகன் - தவிக்க விட்டு மாயமான மணமகள்!

செப்டம்பர் 03, 2019 330

வேலூர் (03 செப் 2019): மண மேடையில் மணமகன் காத்திருக்க, குளிக்கச் செல்வதாக சென்ற மணமகள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் வெள்ளைக்குட்டை எனும் கிராமத்தில் வசிப்பவர் சின்னத்தம்பி. இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருடைய மகள் ஐஸ்வர்யா. சின்னத்தம்பி மகள் ஐஸ்வர்யாவுக்கு மோட்டூர் கிராமத்தை சேர்ந்த பிச்சாண்டி மகன் விநயாகத்துக்கும் திருமணம் நடைபெற பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் ஐஸ்வர்யாவுக்கும், விநாயகத்துக்கும் நேற்று திருமணம் நடக்க இருந்தது. தாலி கட்டுவதற்கு முன்பு பெண்ணிற்கு செய்ய வேண்டிய சம்பிரதாயங்களான நலங்கு வைத்துள்ளனர். நலங்கு வைக்கும் சம்பிரதாயம் முடிந்ததும் ஐஸ்வர்யா குளிக்க சென்றார்.

குளிக்க சென்ற மணப்பெண் ஐஸ்வர்யா வெகு நேரமாகியும் பாத்ரூமில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் குளியலறை கதவை தட்டி ஐஸ்வர்யா என்று கேட்டு உள்ளனர்.அப்போது பாத்ரூமில் இருந்து எந்த சத்தமும் வராததால் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். மணப்பெண் ஐஸ்வர்யா பாத்ரூமில் இல்லாததை பார்த்து இரு வீட்டாரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்பு ஐஸ்வர்யாவின் மொபைல் எண்ணுக்கு அழைத்துள்ளனர் அதிலும் எந்த பதிலும் இல்லை. அதற்கு பிறகு பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் ஐஸ்வர்யாவை கண்டுபிடிக்க இயலவில்லை.

திருமணம் நடக்க இருந்த நாளன்று மணப்பெண் காணாமல் போனது மணமகனின் தந்தை பிச்சாண்டியை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனால் மனமுடைந்த பிச்சாண்டி உடனடியாக தன் உறவினர்களுடன் சொந்த ஊருக்கு திரும்பி சென்றார். மேலும் சின்னத்தம்பி தன்னுடைய உறவினர்களுடன் சென்று அப்பகுதி காவல்நிலையத்தில் மகளை காணவில்லை என்று புகாரளித்தார். புகாரை வாங்கிய போலீஸார் இது குறித்து விசாரித்து வருகின்றனர். திருமண நாளன்று மணப்பெண் காணாமல் போனது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...