ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்கி சிபிஐ நீதிமன்றம் உத்தரவு!

செப்டம்பர் 05, 2019 418

புதுடெல்லி (05 செப் 2019): ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம், மகன் கார்த்திக் சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்கி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2006-ஆம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்த போது மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம் ஏர்செல் நிறுவனத்தில் ரூ 3,500 கோடி முதலீடு செய்தது. இந்த முதலீடு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதற்கு கார்த்தி சிதம்பரமும் உதவி செய்தார் என்றும் அதற்கு பிரதிபலனாக அவரது நிறுவனங்களுக்கு பணம் கைமாறியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிபிஐயும் அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இருவருக்கும் எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் ப.சிதம்பரமும் கார்த்தியும் தொடர்ந்த முன்ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி ஓபி ஷைனி முன்பு, கடந்த இரு தினங்களுக்கு முன்னர் விசாரணைக்கு வந்தது. அப்போது ப. சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது. ப.சிதம்பரம், கார்த்தியை கைது செய்து விசாரித்தால்தான் பல உண்மைகள் வெளியே வரும். ஏர்செல் மேக்சிஸ் வழக்கு தேசநலன் சார்ந்தது என சிபிஐ வாதம் செய்தது.

இந்த நிலையில் நீதிபதி ஷைனி, முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தேதியை வரும் 5-ஆம் தேதிக்கு மாற்றி உத்தரவிட்டார். இந்த நிலையில் ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீது சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி. ஷைனி 2 மணிக்கு தீர்ப்பளித்தார். அதற்கு முன்னதாக ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என சிபிஐ வாதம் செய்தது. அத்துடன் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் தர உச்சநீதிமன்றம் மறுக்கப்பட்டதை கருத்தில் கொள்ள வேண்டும் என சிபிஐ வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். அதை நீதிபதி ஓ.பி. ஷைனி நிராகரித்தார்.

இதனையடுத்து ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் ஆகிய இருவருக்கும் முன்ஜாமீன் வழங்கி நீதிபதி ஓ.பி. ஷைனி உத்தரவிட்டார். ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் விசாரணைக்கு பி.சிதம்பரமும், மகன் கார்த்திக் சிதம்பரமும் ஒத்துழைப்பு தரவேண்டும் என நிபந்தனை அளிக்கப்பட்டுள்ளது. ப.சிதம்பரம், கார்த்திக் சிதம்பரம் தலா ரூ.1 லட்சம் பிணைத்தொகை செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இருவரும் தலா ரூ.1 லட்சம் பிணைத்தொகை செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டது. மேலும் வெளிநாடுகளுக்கு முன் அனுமதி பெறாமல் செல்லகூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...