தக்காளி விலை வீழ்ச்சி - விவசாயிகள் கவலை!

செப்டம்பர் 06, 2019 296

தர்மபுரி (06 செப் 2019): தர்மபுரி மாவட்டத்தில் தக்காளி விளைச்சல் அதிகரிப்பால், விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, அதகப்பாடி, பாப்பாரப்பட்டி, இண்டூர், பி.அக்ரகாரம், பென்னாகரம், பாலக்கோடு, மாரண்டஅள்ளி, நல்லம்பள்ளி, தொப்பூர், கடத்தூர், மொரப்பூர், கம்பைநல்லூர், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், சுமார் 4 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். தக்காளி விளைச்சல் தற்போது அமோகமாக உள்ளது. இதனால், ராயக்கோட்டை, பாலக்கோடு, தர்மபுரி தக்காளி மார்க்கெட்டிற்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனர். இங்கிருந்து வெளிமாநிலங்களுக்கும் தக்காளி செல்கிறது. மேலும், சென்னை, திருச்சி, கோவை, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் நேரில் வந்து வாங்கி செல்கின்றனர்.

சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளதால் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. 25 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி, தற்போது ₹100க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறையாக கிலோ ₹10க்கு விற்பனை செய்யப்படுகிறது. உழவர் சந்தையில் ₹6 முதல் ₹8க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் இதே தேதியில் ஒருகிலோ தக்காளி ₹20 முதல் ₹22 வரை உழவர் சந்தையில விற்பனை செய்யப்பட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...