பெண்ணிடம் வீடு புகுந்து நகை பறிப்பு - அதிராம்பட்டினத்தில் பட்டப்பகலில் துணிகரம்!

செப்டம்பர் 06, 2019 1567

அதிராம்பட்டினம் (06 செப் 2019): அதிராம்பட்டினத்தில் வீடு புகுந்து பெண்ணிடம் வாலிபர்கள் நகையை கொள்ளை அடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம கிழக்கு கடற்கரை சாலை அருகில் வசித்து வருபவர் அன்பழகன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் அவரது மனைவி சுமித்ரா (வயது 32) மற்றும் தனது குழந்தைகளுடன் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அவரது உறவினர் திருமணத்திற்காக சுமித்ரா பேராவூரணி சென்று விட்டு நேற்று மதியம் மூன்று மணி அளவில் வீட்டிற்கு வந்து வீட்டை திறந்து கொண்டு உள்ளே சென்றார்.

அப்போது திடீரென 2 வாலிபர்கள் வீட்டுக்குள் புகுந்தனர். ஒரு வாலிபர் சுமித்ராவின் வாயை பொத்த மற்றொரு மர்ம நபர் சுமித்ரா அணிந்திருந்த நெக்லஸ் , வளையல் போன்றவற்றை அறுத்து எடுத்துக் கொண்டு வீட்டில் கிடந்த பெல்ட்டை எடுத்து சுமித்ராவின் கழுத்தை பிடித்து நெரித்து உள்ளனர்.

இதனால் மூச்சு விட திணறிய சுமித்ரா திருடர்களிடம் என்னை ஒன்றும் செய்து விடாதீர்கள். நீங்கள் எது கேட்டாலும் தருகிறேன் என்று பயத்தில் கூறினார். இதனால் வாலிபர்கள் தோட்டை கழற்றித் தருமாறு கேட்டனர். இதையடுத்து அவர் காதில் இருந்த இரு தோடுகளையும் கழட்டி கொடுத்தார்.

பின்னர் கொள்ளையர்கள் செல்போனையும் வாங்கிக்கொண்டு சுமித்ராவை அடித்து உதைத்தனர். பின்னர் ஒரு அறையில் சுமித்ராவை பூட்டி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டனர்.

இதையடுத்து வீட்டின் அறையில் இருந்த சுமித்ரா ‘‘என்னை காப்பாற்றுங்கள்..’’ என்று சொல்லி சத்தம் போட்டார். அப்போது கிழக்கு கடற்கரைச் சாலையில் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்களுக்கு அலறல் சத்தம் கேட்கவே அவர்கள் விரைந்து வந்து சுமித்ராவை அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து அதிராம்பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் அதிராம்பட்டினம் இன்ஸ்பெக்டர் ஜெயமோகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...