சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தஹில் ரமானி திடீர் ராஜினாமா!

செப்டம்பர் 07, 2019 260

சென்னை (07 செப் 2019): மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட கொலிஜியத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தஹில் ரமானி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மும்பை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த தஹில் ரமானி, கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.

அவர் பொறுப்பேற்று ஓராண்டு முடிந்த நிலையில், மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க, உச்சநீதிமன்ற கொலீஜியம் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி பரிந்துரை செய்தது. அதே நேரத்தில் மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள அஜய்குமார் மிட்டலை, சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நியமிக்கவும் கொலீஜியம் பரிந்துரை செய்தது.

தனது பணியிடமாற்றத்தை மறுபரிசீலனை செய்யுமாறு கொலீஜியத்திற்கு தஹில் ரமானி கடிதம் எழுதினார். அந்த கடிதத்தை நிராகரித்த கொலீஜியம், மேகாலயாவிற்கு பணியிடமாற்றம் செய்யும் பரிந்துரையை திரும்ப பெற முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தது.

இதையடுத்து, நீதிபதி தஹில் ரமானி பதவி விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக, அதிகாரப்பூர்வமான ராஜினாமா கடிதத்தை குடியரசுத்தலைவருக்கு அவர் அனுப்பியுள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. ராஜினாமா கடிதத்தின் நகல் இந்திய தலைமை நீதிபதிக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவின் மிகப் பழமையான நீதிமன்றங்களில் ஒன்றான சென்னை உயர் நீதிமன்றத்தில் 75 நீதிபதிகள் (தலைமை நீதிபதியை சேர்த்து) பணியிடங்கள் உள்ளன. தற்போது 60 நீதிபதிகள் பணியில் உள்ளனர். மீதமுள்ள பணியிடங்கள் காலியாக உள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...